ஐ.பி.எல் போட்டிகளின் போது மது, புகையிலை மறைமுக விளம்பரங் களுக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது – அன்புமணி வரவேற்பு!….

ஐ.பி.எல் போட்டிகளின் போது மது, புகையிலை மறைமுக விளம்பரங்களுக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் வரும் 22-ஆம் தேதி தொடங்கவுள்ள ஐ.பி.எல் போட்டிகளின் போது விளையாட்டு அரங்குகளிலும், தொலைக்காட்சி ஒளிபரப்புகளின் போதும் மது மற்றும் புகையிலை தொடர்பான விளம்பரங்களைக் கூட அனுமதிக்கக் கூடாது என்று ஐ.பி.எல் நிர்வாகத்திற்கு மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. மக்கள் நலன் கருதி மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

இது தொடர்பாக ஐ.பி.எல் அமைப்புக்கு மத்திய சுகாதார அமைச்சகத்தின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனர் அருண்சிங் துமால் எழுதியுள்ள கடிதத்தில்,’’இளைஞர்களுக்கு கிரிக்கெட் வீரர்கள் முன்னுதாரணமாக திகழ்வதாலும், அவர்கள் சுகாதாரமான, சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதாலும், ஐ.பி.எல் போட்டி இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழா என்பதாலும் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதிலும், மத்திய அரசின் சுகாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதிலும் ஐ.பி.எல் அமைப்புக்கு சமூக, தார்மீகக் கடமை உள்ளது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை மிகவும் சரியானது ஆகும்.

கிரிக்கெட் போட்டிகள் மூலம் புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான மறைமுக விளம்பரங்கள் திணிக்கப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சியும், பசுமைத் தாயகம் அமைப்பும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. இது தொடர்பாக மத்திய அரசு, மாநில அரசு, கிரிக்கெட் வாரியங்களுக்கு நான் பலமுறை கடிதம் எழுதியுள்ளேன்.

பசுமைத் தாயகம் அமைப்பு கிரிக்கெட் மைதானம் முன்பாக பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளது.

“இந்தியா ஒரு விளையாட்டு தேசமாக உருவெடுத்து வருகிறது. விளையாட்டுகளை பார்க்கும் மக்களின் எண்ணிக்கை அதனை உறுதி செய்கின்றன. விளையாட்டு அணிகள் மீதும் வீரர்கள் மீதும் தங்களது அன்பையும் விசுவாசத்தையும் விளையாட்டு ரசிகர்கள் வெறித்தனமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

விளையாட்டுகள் மீதான இளைஞர்களின் பேரார்வத்தை புகையிற்ற புகையிலை நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை திணிப்பதற்கான ஒரு வாய்ப்பாக பார்க்கின்றன.

இதைத் தடுக்கும் புகையிலைப் பொருட்களின் விளம்பரம், ஊக்குவிப்பு நடவடிக்கைகள், புரவலர் செயல்பாடுகள் ஆகியவற்றை முழுமையாக தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.

அதே கருத்தை மத்திய அரசும் வலியுறுத்தியிருப்பது பாமகவின் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

மத்திய அரசின் ஆணையை ஐ.பி.எல். அமைப்பு உறுதியாக பின்பற்ற வேண்டும். சென்னை உள்பட ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் விளையாட்டு அரங்குகள் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்புகளின் போது மது மற்றும் புகையிலை தொடர்பான விளம்பரங்களை ஐ.பி.எல் அமைப்பு தடை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *