உத்தர பிரதேசத்தின் வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த தடை – உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு!!

உத்தர பிரதேசம்
உத்தர பிரதேசத்தின் வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தடையை அதிகாரிகள் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்று மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உத்தர பிரதேச வழிபாட்டுத் தலங்களின் ஒலி பெருக்கிகள் தொடர்பாக கடந்த 2022-ம் ஆண்டு மாநில அரசு பல்வேறு வழிகாட்டு நெறிகளை வெளியிட்டது.

இதன்படி வழிபாட்டுத் தலங்களில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளின் சப்தம், அந்த வளாக அளவில் மட்டுமே இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தால் ஒலிபெருக்கிகளை காவல் துறை அகற்றலாம் என்று உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டது.

அரசின் உத்தரவின்படி கடந்த 2023, 2024-ம் ஆண்டுகளில் உத்தர பிரதேசம் முழுவதும் வழிபாட்டுத் தலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டன.

இந்த சூழலில் உத்தர பிரதேசம் வாராணசியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நேற்று முன்தினம் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மூத்த அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: உத்தர பிரதேசத்தின் வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த தடையை அதிகாரிகள் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். ஹோலி பண்டிகையின்போது அதிக சப்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது.

வங்கிகள், நிதி நிறுவனங்கள், வணிக நிறுவனங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். சட்டம், ஒழுங்கை சீராக பராமரிக்க வேண்டும். கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் இப்போதே மேற்கொள்ள வேண்டும். அரசு நலத்திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

உத்தர பிரதேசத்தின் திருமண உதவித் திட்டத்தின் கீழ் 4 லட்சம் பெண்களின் திருமணத்துக்கு உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. உஜ்வாலா திட்டத்தின் கீழ் 1.86 கோடி பெண்களுக்கு இலவச சமையல் காஸ் இணைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

இரட்டை இன்ஜின் அரசால் உத்தர பிரதேசம் அதிவேகமாக முன்னேறி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக வாரணாசியில் கட்டப்பட்டு வரும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆய்வு செய்தார். வரும் 2026-ம் ஆண்டுக்குள் மைதானத்தை திறக்க வேண்டும்.

அதற்கேற்ப கட்டுமான பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *