திருப்பதி ;
திருப்பதி மலையில் தனியாக இருந்த தமிழகத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடித்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 5ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பெண் ஒருவர் தனியாக வந்துள்ளார். அவரிடம் அந்த கோயிலில் இருந்த பெண் மற்றும் ஆண் ஆகிய இருவரும் பேச்சுக்கொடுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் உணவில் மயக்க மருந்து கொடுத்துள்ளனர்.
இதனால் தனியாக வந்த பெண் மயங்கிய நிலையில் அப்பெண்ணிடம் இருந்த நகை மற்றும் பணத்தை இந்த இரண்டு பேரும் திருடி சென்றுள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
கோயில் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவையும் ஆய்வு செய்தனர். இதில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் மற்றும் அவருடைய சித்தி சாரதா ஆகியோர் இணைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு கோவில்களுக்கு சென்று அங்கு தனியாக வந்திருக்கும் பெண்களை குறி வைத்து அவர்களிடம் மெதுவாக பேச்சு கொடுத்து பின்னர் சாப் பாட்டில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து அவர்கள் அணிந்திருக்கும் தங்க ஆபரணங்கள், பணம், செல்போன்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருப்பது தெரியவந்தது.
ஏற்கனவே தமிழ்நாட்டில் பல இடங்களில் இது போன்ற செயல்களில் விஜயகுமார் ஈடுபட்டு கைதாகி சிறைக்கு சென்று திரும்பி இருக்கிறார்.
இந்த நிலையில் தான் திருப்பதி மலையில் தனியாக வந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
போலீசாரின் விசாரணைக்கு பிறகு கொள்ளையில் ஈடுபட்டவர்களிடம் இருந்து சுமார் 21 கிராம் எடையுள்ள தங்க ஆபரணங்கள், 45 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், 3 மொபைல் போன்கள், மயக்க மாத்திரைகள் 6, ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்