மும்பை;
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
ஐ.பி.எல். தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கொல்கத்தா அணியில் இடம் பெற்று இருந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் விலகி உள்ளார். காயம் காரணமாக அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
அவருக்கு பதிலாக இடதுகை வேகப்பந்து வீச்சாளரான சேத்தன் சக்காரியா கொல்கத்தா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பை கொல்கத்தா நிர்வாகம் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்த சக்காரியா கடந்த சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.
இதைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தில் இவரை எந்த அணியும் எடுக்கவில்லை. தற்போது இவரை கொல்கத்தா அணி ரூ. 75 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை சக்காரியா 19 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
டி20 தொடரில் ஒட்டுமொத்தமாக இவர் 46 போட்டிகளில் விளையாடி 65 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இவரது சராசரி 7.69 ஆகும்.