மதுரை மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் அமளி!!

மதுரை,
மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்கள், 100 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வணிக வளாகங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரியைவிட குறைந்த அளவிலான வரி விதிக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில், ரூ.150 கோடி மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அப்போதைய மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றிய தினேஷ்குமார் அளித்த புகாரின் பேரில், மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, வரி விதிப்பு முறைகேட்டில் தொடர்புடைய ஓய்வுபெற்ற உதவி ஆணையர், உதவி வருவாய் அலுவலர் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்தனர்.

இந்த நிலையில், வரி விதிப்பு முறைகேட்டில் திமுகவைச் சேர்ந்த மண்டலத் தலைவர்களுக்கும் தொடர்பு உள்ளது என எதிர்க்கட்சியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர். இதனடிப்படையில், மத்திய குற்றப் பிரிவு போலீசார் மண்டலத் தலைவர்களிடமும் விசாரணை நடத்தினர்.

இதனிடையே, மண்டலத் தலைவர்கள் 5 பேர், நிலைக் குழு உறுப்பினர்கள் 2 பேர் என மொத்தம் 7 பேரை ராஜினாமா செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதன்பேரில், அவர்கள் அனைவரும் அண்மையில் ராஜினாமா செய்தனர்.

மதுரை மாநகராட்சியில் பணியாற்றிய வருவாய் உதவியாளர்கள், கணினி இயக்குபவர் உள்ளிட்ட 55 பேரிடம் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதில், வருவாய் உதவியாளர்கள் 7 பேர், கணினி இயக்குபவர் ஒருவர் என 7 பேரை பணியிடை நீக்கம் செய்தும், தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பணியாற்றிய நாகராஜன், மகாபாண்டி, பாலமுருகன் ஆகிய 3 பேரை பணிநீக்கம் செய்தும், மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் உத்தரவிட்டார்.

இந்தப் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் இன்று காலை தொடங்கியது. முறைகேட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுகவினர் கருப்புச் சட்டை அணிந்து வந்தனர்.

தொடர்ந்து, காலை 10.35 மணிக்கு மேயர் இந்திராணி கூட்டரங்குக்கு வருகை தந்தார். அவருடன் ஆணையர் சித்ரா விஜயனும் வருகை தந்தார். வழக்கம் போல மேயர் உரையாற்றத் தொடங்கினார்.


அப்போது, அதிமுக உறுப்பினர்கள், பாஜக உறுப்பினர் எழுந்து வரி விதிப்பு முறைகேடு தொடர்பாக முழக்கங்களை எழுப்பி, மேயர் இருக்கையை நோக்கி முற்றுகையிட்டனர். இதனிடையே திமுக உறுப்பினர்கள் எழுந்து அதிமுக உறுப்பினர்களை வழிமறித்தனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள், பாஜக உறுப்பினர் ஒருவர் என அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *