ஆஸ்கார் விருது பெற்ற இந்திய தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த கார்த்திக் சுப்பராஜ்!!

சென்னை:
ஆஸ்கார் விருது பெற்ற இந்திய தயாரிப்பு நிறுவனம் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குநருடன் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்குகிறது.


குனீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோரின் ஆஸ்கார் விருது பெற்ற தயாரிப்பு நிறுவனமான சீக்யா என்டர்டெயின்மென்ட், முதன்முறையாக புகழ்பெற்ற இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுடன் இணைகிறது. எளிமையான பூஜைக்கு பிறகு மதுரையில் படத்தின் படப்பிடிப்பு இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

பல ஆண்டுகளாக புதுமையான மற்றும் விருதுகளுக்கு தகுதியான கதை சொல்லலுக்கு பெயர் பெற்றது சீக்யா என்டர்டெயின்மென்ட். இந்தியாவின் முதல் ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படமான ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’, ‘தி லஞ்ச்பாக்ஸ்’, ‘மசான்’, ‘பாக்லைட்’ மற்றும் சமீபத்தில் தேசிய விருது பெற்ற ‘காதல்’ போன்ற உலகளவில் பாராட்டப்பட்ட பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளது இந்நிறுவனம்.

தனித்துவமான கண்ணோட்டத்துடன், புதிய திறமையாளர்களை வளர்த்து உலகளவில் உள்ள பார்வையாளர்கள் மத்தியில் நற்பெயரை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் சமகால இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வருகிறார். இது அவருடைய பத்தாவது திரைப்படமாகும். கடந்த பத்தாண்டுகளில் ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘பேட்ட’, ‘இறைவி’, ‘மெர்குரி’, ‘ஜகமே தந்திரம்’, ‘மகான்’, ‘ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்’ மற்றும் ‘ரெட்ரோ’ என விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பாராட்டப்பட்ட பல படைப்புகளை அவர் கொடுத்திருக்கிறார்.

இந்தப் படம் குறித்து சீக்யா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர் குனீத் மோங்கா கபூர் பகிர்ந்து கொண்டதாவது, “பல்வேறு கலாச்சாரங்களை கடந்து பார்வையாளர்களை சென்றடையும் மண்சார்ந்த கதைகளை சொல்வதில்தான் நாங்கள் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளோம். அந்த நம்பிக்கையை நிச்சயம் கார்த்திக் சுப்பராஜ் காப்பாற்றுவார்.

அவரது கதைகள் புதுமையாகவும் உலகளவில் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் விதமாகவும் அமையும். கார்த்திக்குடன் இந்தப் பயணத்தில் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டதாவது, “சீக்யா தயாரித்திருக்கும் படங்கள் அனைத்தையும் நான் ரசித்திருக்கிறேன். நான் திரைக்கு கொண்டு வர வேண்டும் என விரும்பும் கலையுடன் சீக்யாவின் ரசனையும் ஒத்துப்போகிறது.

விருதுகளுக்கு அர்த்தமுள்ள, தகுதியான படங்களைத் தயாரித்த குனீத் மற்றும் அச்சினுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. நான் எழுதியிருக்கும் இந்தக் கதை என் மனதுக்கு நெருக்கமானது. அந்தக் கதைக்கான சரியான தயாரிப்பாளர்கள் கிடைத்துள்ளனர்” என்றார்.

சீக்யா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் அச்சின் ஜெயின் பகிர்ந்து கொண்டதாவது, “கல்ட் மற்றும் கமர்ஷியல் என்ற இரண்டு விஷயங்களையும் சரியாகக் கையாளத் தெரிந்தவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். அவரது கதைகள் எதிர்பாராத திருப்பங்களையும் அதே சமயம் ஆழமான உணர்வுகளையும் கொண்டிருக்கும்.

பார்வையாளர்களின் எதிர்பார்ப்பையும் சரியான கதை சொல்லல் திறமையும் கொண்ட இயக்குநருடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறோம். கார்த்திக் சுப்பராஜூடன் இணைந்திருப்பது சக்திவாய்ந்த வேரூன்றிய கதைகளை, உலகளாவிய சினிமா மொழி மூலம் வெளிப்படுத்தும் சீக்கியாவின் நோக்கத்தை பிரதிபலிக்கிறது” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *