சென்னை;
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 286 நாட்களுக்கு பிறகு பூமிக்கு பாதுகாப்பாக திரும்பியிருக்கும் விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை வரவேற்று மகிழ்கிறோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 286 நாட்களுக்கு பிறகு பூமிக்கு பாதுகாப்பாக திரும்பியிருக்கும் விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை வரவேற்று மகிழ்கிறோம்.
எட்டு நாட்களில் முடிவடைய வேண்டிய விண்வெளிப் பயணம் ஒன்பது மாதங்கள் நீடித்தாலும், புதிய சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொண்டு அத்தகைய நிலையிலும் பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை மேற்கொண்ட இருவரின் வியக்கத்தக்க பணிகள் பாராட்டுக்குரியது.
அதிலும், குறிப்பாக விண்வெளியில் நீண்டகாலம் தங்கிய முதல் பெண் என்ற சாதனையை படைத்திருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் அவர்களின் விடா முயற்சியும், மன உறுதியும் விண்வெளி ஆராய்ச்சியில் சாதிக்க நினைக்கும் இளம் விண்வெளி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தகுந்த பாடமாகவும் உந்து சக்தியாகவும் விளங்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.