“கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி சொன்னது தான் நிதர்சனமான உண்மை” – செல்லூர் ராஜூ பதில்!!

மதுரை ;
மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் தினமணி தியேட்டர் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நீர், மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, “கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி சொன்னது தான் நிதர்சனமான உண்மை. அமித்ஷா அவருடைய கருத்தை பதிவு செய்துள்ளார். அதிமுகவை எப்படி வழிநடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும்.

அமித்ஷாவை ஏன் தனித்தனியாக சந்தித்தீர்கள் என செங்கோட்டையனிடம் கேளுங்கள். அதிமுகவில் செங்கோட்டையன் மூத்த நிர்வாகிகளை மதிக்கக்கூடியவர். மதிக்கப்பட்டவர்.

செங்கோட்டையன் அவரது கருத்தை சொல்லியுள்ளார். எடப்பாடி பழனிசாமியிடம், செங்கோட்டையன் சொல்லிவிட்டு சென்றாரா? இல்லையா? என எனக்கு தெரியாது.

கூட்டணிக்காக செங்கோட்டையனை பாஜக பயன்படுத்துகிறது என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். அரசியல் விமர்சகர்கள் ஆயிரம் சொல்வார்கள். அதெல்லாம் நடக்குமா? இன்னும் தேர்தலுக்கு 1 ஆண்டுகள் உள்ளது.

தமிழகத்தில் எத்தனை கட்சிகள் உள்ளது? ஏன் எங்களைப்பற்றி மட்டும் ஊடங்கங்கள் பேசுகிறது. அதிமுக பிரியவில்லை. அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். ஒன்றிரண்டு பேர் போவது வழக்கமான ஒன்று. ஒரு தலைவர் சென்றால் அவர் பின்னால் 4 பேர் இருப்பார்கள்.

C – Voter கருத்துக் கணிப்பில் முதலமைச்சராக வருவது தொடர்பாக மு.க.ஸ்டாலினை விட எடப்பாடி பழனிசாமிக்கு குறைவாகத்தான் போட்டுள்ளார்கள்.

இதுக்கு பெயர் தான் ஊடு சால் என்பது. அதிகமாக போட்டால் நம்ப மாட்டார்கள் என்று குறைவாக போட்டுள்ளார்கள். கருத்துக் கணிப்பு தூள் தூளாகிவிடும்.

மக்கள் தான் எஜமானர்கள். நான் அமைச்சர் மூர்த்தி பற்றி தரக்குறைவாக பேசியதாக அவர் சொல்கிறார். நான் எந்த இடத்திலாவது அவர் பெயரை பயன்படுத்தினேனா? அமைச்சர் மூர்த்தி தேவையில்லாமல் ஒரு அனுதாபத்தை தேட பார்க்கிறார்.

மதுரை மேற்கு தொகுதியில் வெற்றி பெறுவதற்கு அனுதாபமாக பேசுகிறாரா என்று தெரியவில்லை. த.வெ.க விமர்சனத்தை நாங்கள் பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *