”எம்புரான்” திரைப்படத்தில் முல்லை பெரியாறு அணை பற்றிய காட்சிகளும் வசனங்களும் உடனடியாக நீக்கப்பட வேண்டும் – வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை!!

சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மோகன்லால் நடிப்பில் உருவான எம்புரான் திரைப்படம் கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியானது. மலையாளத்தில் எடுக்கப்பட்டு, அனைத்து மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு, திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

நெடும்பள்ளி என்கிற இடத்தில் அணை இருப்பதாகவும், அந்த அணையை குண்டு வைத்து தகர்க்க வேண்டும் எனவும், அந்த அணையானது திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் வெள்ளையர்களால் மிரட்டி 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது எனவும் வசனம் இடம் பெற்றுள்ளது.

திருவிதாங்கூர் மன்னர் போய்விட்டார், வெள்ளையர்கள் போய்விட்டார்கள், ஆனால் ஜனநாயகம் என்கிற பெயரில் அந்த அணை மட்டும் கேரளாவை காவு வாங்க காத்திருப்பது போன்ற வசனங்கள் நேரடியாகவே இந்த திரைப்படத்தில் நான்கு இடங்களில் முல்லைப் பெரியாறு அணையை பற்றி இடம்பெற்றுள்ளது.

முல்லைப்பெரியாறு அணை இருக்கும் பகுதியை, ஆங்கிலேய அரசுக்குள் அடங்கி இருந்த திருவிதாங்கூர் மன்னர், 999 வருடங்களுக்கு இலவயமாக எழுதிக் கொடுத்தாராம். எழுதி வாங்கிய பிரிட்டீஷ்கார்கள் போய்விட்டனர். மன்னராட்சியும் போய் விட்டது; ஆனாலும் அந்த ஆபத்து மக்களை காவு வாங்க காத்து நிற்கிறது என்று ஒரு வசனம்.

இரண்டு ஷட்டரை திறந்தாலே, மக்களை பலிவாங்குற அணையை, அதாவது முல்லைப்பெரியாறு அணையை, குண்டு வைத்து தகர்த்தால், கேரளம் மறுபடியும் தண்ணீருக்குள் மூழ்கும்னு ஒரு வசனம்.


அணையை காப்பாற்ற செக் டேம் எனும் சுவர்களால் பயனில்லை, அணையே இல்லாமல் இருந்தால்தான் சரி என்று ஒரு வசனம்.

இப்படி வசனங்கள் இடம் பெற செய்து காட்சி அமைப்புகளை சித்தரித்து முல்லைப் பெரியாறு அணையால் கேரள மக்களுக்கு ஆபத்து என்று எம்புரான் திரைப்படத்தில் திட்டமிட்டு கருத்து திணிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு ஆய்வு செய்து அணையின் நீர்மட்டத்தை 152 அடி உயர்த்தினாலும் எந்த பாதிப்பும் வராது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால் முல்லைப் பெரியாறு அணையை உடைத்து எறிவதற்கு திட்டமிட்டு கேரளாவில் திரைப்படங்கள் மூலம் அம்மாநில மக்களை பீதியில் ஆழ்த்துவதற்கு சில அக்கறை உள்ள சக்திகள் முயற்சித்து வருகின்றன.

2011 நவம்பர் மாதம் டேம் 999 அதாவது அணை 999 என்று பெயரிடப்பட்ட ஒரு திரைப்படம், ஆங்கிலம், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் திரையிடப்பட்டது. கேரளத்தைச் சேர்ந்த முன்னாள் கடற்படை மாலுமியான சோஹன் ராய் என்பவர் இந்தப் படத்தை இயக்கி இருந்தார்.

ஒரு அணை உடைந்தால் எவ்வளவு பெரிய அழிவு ஏற்படும் என்பதுதான் இந்தப் படத்தின் மையக் கருத்து. ஏற்கனவே முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சை நிலவி வந்த சூழலில் இந்த படம் முல்லைப் பெரியாறு அணை ஆபத்தானது என்று சித்தரித்துக் காட்டியது.

இது முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு மற்றும் கேரளத்தில் உள்ள செல்வந்தர்களால் செய்யப்படும் திட்டமிட்ட சதி என்றும் இந்தப் படத்தை எங்கும் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் நான் அறிக்கை தந்தேன்.

படத்தின் சிறப்புக்காட்சி திரையிடப்படவிருந்த சென்னை தனியார் திரையரங்கில் நுழைந்து படப்பெட்டிகளையும் எடுத்துச் சென்ற மல்லை சத்யா உள்ளிட்ட கழக கண்ணின் மணிகள் 25 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் மீண்டும் எம்புரான் திரைப்படம் மூலம் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு அற்றது என்று சித்தரித்து அணையை உடைக்க சதித்திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது.

எனவே இத்திரைப்படத்தில் முல்லை பெரியாறு அணை பற்றிய காட்சிகளும் வசனங்களும் உடனடியாக நீக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் எம்புரான் திரைப்படம் திரையிடலை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *