விருதுநகரில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 26 குடிசைகள் எரிந்து முற்றிலும் சேதம்!!

விருதுநகர்:
விருதுநகரில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 26 குடிசைகள் எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தன.

விருதுநகரில் சொக்கநாத சுவாமி கோயில் அருகே உள்ள பெருமாள் கோயில் தெருவில் பால் பண்ணை பேட்டை உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

400க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மிக நெருக்கமாக வீடுகள் உள்ள இந்த பகுதியில் இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தீ வேகமாக அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது. இதனால் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

குழந்தைகளையும் முதியோர்களை அழைத்துக் கொண்டு அனைவரும் பால்பண்ணை பேட்டையில் இருந்து வேகமாக வெளியேறினர். நான்கு வீடுகளில் இருந்த சிலிண்டர்கள் வெடித்துச் சிதறின.

தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் 26 வீடுகள் முற்றிலுமாக தீயில் எரிந்து சேதமடைந்தன.

பால்பண்ணையில் இருந்த 10க்கும் மேற்பட்ட பசுக்கள் பத்திரமாக மீட்கப்பட்டன. பொதுமக்கள் விரைவாக அங்கிருந்து வெளியேறியதால் உயிரிழப்பு தடுக்கப்பட்டது. ஆனாலும் தீ விபத்தில் 26 வீடுகளிலும் இருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து சேதமடைந்தன.

சம்பவ இடத்தில் எஸ்.பி. கண்ணன் நேரில் விசாரணை நடத்தினார். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கோட்டாட்சியர் சிவகுமார் தலைமையில் வருவாய்த்துறையினர் அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளனர்.

மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விருதுநகர் பஜார் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *