சென்னை:
திமுக மீதான மதுபான ஊழல் குற்றச்சாட்டை மையப்படுத்தி அதிமுக எம்எல்ஏக்கள் இன்று தமிழக சட்டமன்றக் கூட்டத்திற்கு ‘யார் அந்த தியாகி” என்ற பேட்ச் குத்தியும், பதாகைகளை ஏந்தியும் வந்திருந்தனர். சட்டமன்றத்துக்குள்ளும் பதாகைகளுடன் அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இதற்கிடையே டாஸ்மாக் ஊழல் விவகாரம் குறித்து பேச அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் அதைப்பற்றி சட்டமன்றத்தில் பேச முடியாது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். மேலும் டாஸ்மாக் விவகாரம் குறித்து இபிஎஸ் பேசியதும் அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
இதையடுத்து அதிமுகவினர் பதாகைகளை ஏந்தியவாறு அவைக்குள் கோஷமிட்டனர். இதனால் அவர்களை இன்று ஒரு நாள் சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார். இதைத்ததோர்ந்து இபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஆனால் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வெளியேறவில்லை. அவர் அவைக்குள்ளேயே இருந்தார். மேலும் தனது முறை வந்தபோது எழுந்து தனது தொகுதி பிரச்சனைகள் குறித்து பேசினார்.
ஏற்கனவே அதிமுகவில் இபிஎஸ் – செங்கோட்டையன் இடையே பனிப்போர் வலுத்து வரும் நிலையில், செங்கோட்டையன் வெளியேறாமல் அவையில் தனி ஆளாக தனது பணிகளை தொடர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.