சென்னை:
நடப்பு ஐபிஎல் தொடரின் 25-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 31 ரன்னும், விஜய் சங்கர் 29 ரன்னும் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு சென்னை அணி கேப்டன் எம்.எஸ்.தோனி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த சில நாட்களாகவே எங்களுக்கு சாதகமாக எதுவும் நடக்கவில்லை. நிறைய சவால்கள் இருக்கிறது. அதையெல்லாம் சமாளித்துதான் ஆக வேண்டும்.
நாங்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை. பேட்டிங்கின்போது பந்து கொஞ்சம் நின்றுதான் வந்தது. நாங்கள் பவுலிங் செய்கையில் அவர்களுக்கும் அப்படித்தான் இருந்தது. எங்களுக்கு பார்ட்னர்ஷிப்களே அமையவில்லை.
நாங்கள் சில போட்டிகளில் நன்றாக ஆடியிருக்கிறோம். எங்களது அணுகுமுறையை வேறு அணிகளோடு ஒப்பிட வேண்டாம் என நினைக்கிறேன்.
எங்களுடைய பலம் என்னவோ அதற்கேற்ப ஆடினால் போதும் என நினைக்கிறேன். எங்கள் அணியில் சிறப்பான ஓப்பனர்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் எல்லா பந்துளையும் சிக்சர் அடிக்கக் கூடியவர்கள் அல்ல. ஆனால், அவர்கள் திறன்வாய்ந்த தரமான பேட்டர்கள்.
ஸ்கோர் போர்டை பார்த்து அழுத்தம் ஏற்றிக்கொள்ளாமல் சீரான இடைவெளியில் பவுண்டரிகளை அடித்தாலே நமக்கு தேவையான ஸ்கோர் வந்துவிடும்.
பவர்பிளேவில் 60 ரன்கள் அடிக்கவேண்டும் என்று நினைத்து ஆடக்கூடாது. ஏனென்றால் பவர்பிளேவில் விக்கெட்டுகளை அதிக அளவு இழந்துவிட்டால் பின்னர் நடு வரிசை வீரர்களுக்கு அது கடினமாக மாறிவிடும்.
இதன்மூலம் பின்வரிசை வீரர்களால் பெரிய ஷாட்டுகளை ஆட முடியாது என தெரிவித்தார்.