ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பையை சேர்ந்த 17 வயதான தொடக்க வீரர் ஆயுஷ்மத்ரே சேர்க்கபட்டுள்ளதாக தகவல்!!

சென்னை;
5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) நிலை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. 5-ல் தோற்றது. 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

கடந்த 23-ந் தேதி நடந்த முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது. அதன் பிறகு ஆர்.சி.பி. (50 ரன்), ராஜஸ்தான் ராயல்ஸ் (6 ரன்) , டெல்லி கேப்பிட்டல்ஸ் (25 ரன்), பஞ்சாப் (18 ரன்) , கொல்கத்தா (8 விக்கெட்) என தொடர்ச்சியாக தோற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 7-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை இன்று (திங்கட்கிழமை) இரவு 7.30 மணிக்கு சந்திக்கிறது. லக்னோவில் உள்ள வாஜ்பாய் ஸ்டேடியத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது.


தொடர்ந்து 5 தோல்வியை சந்தித்துள்ள சி.எஸ்.கே அணி 2-வது வெற்றிக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறது. எஞ்சி இருக்கும் 8 போட்டியில் 7-ல் வெற்றி பெற வேண்டும். அப்படி நிகழ்ந்தால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பில் இருக்க இயலும்.

சி.எஸ்.கே. கேப்டனாக பணியாற்றிய ருதுராஜ் கெய்க்வாட் கவுகாத்தியில் நடந்த போட்டியின் போது காயம் அடைந்தார். இதனால் அவர் போட்டியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து கடந்த ஆட்டத்தில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை டோனி ஏற்றுள்ளார்.

இந்நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பையை சேர்ந்த 17 வயதான தொடக்க வீரர் ஆயுஷ்மத்ரே சேர்க்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் எஞ்சிய போட்டிகளில் சி.எஸ்.கே. அணியில் இணைந்து கொள்வார். வருகிற 20-ந் தேதி மும்பைக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் அவர் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது.

ஆயுஷ் மத்ரே ஏற்கனவே தேர்வு பயிற்சி முகாமில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார். 17 வயதான இவர் இதுவரை 9 முதல் தர போட்டிகளில் விளையாடி 504 ரன்களை குவித்து அசத்தியுள்ளார்.


இதன்மூலம் பிரித்விஷாவின் வாய்ப்பு பறிபோகியுள்ளது. ஐ.பி.எல். ஏலத்தில் விலை போகாத அவர் ருதுராஜூக்கு பதிலாக அணியில் இடம் பெறுவார் என்று பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *