நாட்டில் தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை ஒடுக்க அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசுக்கு துணை நிற்க வேண்டும் – ஜி.கே. வாசன்!!

சென்னை:
நாட்டில் தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை ஒடுக்க அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசுக்கு துணை நிற்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கடந்த 22.04.2025,செவ்வாய்க்கிழமை அன்று காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காரணம் பொது வெளியில், சுற்றுலாத் தலத்தில் பொது மக்கள் மீது மனிதாபிமானமற்ற முறையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த கொடூரத் தாக்குதலை ஈடு செய்ய எந்தவித மருந்தோ, ஆறுதலோ இருக்க முடியாது.

இச்சூழலில் பிரதமர் தீவிரவாதத்திற்கு எதிராக விடுத்த அறிவிப்புகளும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி நடவடிக்கைகள் எடுத்து வருவதும் மக்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது.

மேலும் நாட்டு மக்களுக்கும் சரி, பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பங்களுக்கும் சரி மத்திய அரசின் நடவடிக்கைகள் தைரியத்தைக் கொடுத்திருக்கிறது.

இந்திய நாடு அனைத்து தரப்பு மக்களுக்குமான, சுதந்திரமான, பாதுகாப்பான நாடாக இருக்க வேண்டும் என்பது தான் மத்திய பாஜக அரசின் நோக்கம்.

அப்படி இருக்கும் போது நாட்டில் எங்கும் எதற்காகவும் பொது மக்களுக்கு எதிரான, விரோதமான தீவிரவாதமும், பயங்கரவாதமும் எந்த ரூபத்தில் வந்தாலும் அதற்கான எதிர்வினைகள் மிகவும் கடுமையாக இருக்க வேண்டும். அந்த வகையில் தான் மத்திய அரசு செயல்படுகிறது.

நாட்டு மக்களின் நலன், நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றில் எவ்வித எதிர்மறையான அரசியலுக்கும் இடம் கொடுக்காமல், சமரசத்திற்கு வழி வகுக்காமல், நாட்டுப்பற்றோடு குரல் கொடுப்பது நாட்டு மக்களுக்கும், நாட்டிற்கும் நல்லது.

எனவே நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரும் நாட்டின் ஒட்டு மொத்த மக்களின் பாதுகாப்புக்காக, நாட்டின் பலத்திற்காக ஆளுகின்ற மத்திய அரசுக்கு துணை நிற்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *