மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயம் (யூபிஎஸ்சி) நடத்திய தேர்வு முடிவுகள் சென்ற ஏப்ரல் 22ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை, வெளியானது. இதில், தோனே அகில இந்திய அளவில் 551வது இடத்தைப் பிடித்தார்.
27 வயதான இவர் பெல்காமில் தனது மாமாவுடன் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது இந்த வெற்றிச் செய்தி அவருக்குக் கிடைத்தது. ஆட்டுக்குட்டியை தோள்களில் சுமந்தபடி அவர் போஸ் கொடுக்கும் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இது குறித்து பேட்டி அளித்துள்ள தோனே, “எனது கொண்டாட்டம் எளிமையானதாக இருந்தாலும் ஆழமான அர்த்தமுள்ளதாக இருந்தது. என் மாமா என் தலையில் மஞ்சள் தலைப்பாகையைக் கட்டி, நெற்றியில் மஞ்சள் பூசிவிட்டார். அந்த தருணத்தில் எடுத்த படத்தை யாரோ ஒருவர் இணையத்தில் பகிர்ந்து, அது வைரலாகிவிட்டது” என்கிறார்.
தோனே ஒரு பொறியியல் பட்டதாரி. 2020ஆம் ஆண்டு புனே பொறியியல் கல்லூரியில் சிவில் என்ஜினியரிங் முடித்தார்.
அதற்கு முன், அவர் உள்ளூர் அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை பயின்றார். ஜெய் மகாராஷ்டிரா உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியைப் பயின்றார். இந்த இரண்டு பள்ளிகளுமே அவரது சொந்த கிராமத்திலேயே உள்ளன.
“10ஆம் வகுப்பு வரை எனது பள்ளிப்படிப்பு அனைத்தும் எனது சொந்த ஊரில்தான். எனது 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளை அருகிலுள்ள ஜெய் மகாராஷ்டிரா உயர்நிலைப் பள்ளியில் முடித்தேன்” என்று நினைவுகூர்கிறார் தோனே.
கோலாப்பூர் மாவட்டத்தின் காகல் தாலுகாவில் அமைந்துள்ள யமகே என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர், பல தலைமுறைகளாக செம்மறி ஆடு மேய்க்கும் தொழிலைச் செய்து வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
தங்கர் சமூகத்தில் பிறந்த தோனே, தனது பெற்றோரும் இந்திய ராணுவத்தில் பணியாற்றும் மூத்த சகோதரரும் வலுவான ஆதரவை எப்போதும் தந்தனர் என்கிறார். தோனேயின் குடும்பத்துக்கு ஒரு ஏக்கர் பரப்பளவில் ஒரு சிறிய நிலம் உள்ளது. அவர்களின் முதன்மையான வாழ்வாதாரம் கால்நடை வளர்ப்புதான்.