18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 47-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – குஜராத் அணிகள் மோத உள்ளன.
முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றி, 7-ல் தோல்வி என 4 புள்ளியுடன் 9-வது இடத்தில் இருக்கிறது.
எஞ்சிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, மற்ற அணிகளின் முடிவுகள் சாதகமாக அமைந்து, ரன்ரேட்டிலும் ஓங்கி இருக்க வேண்டும். இப்படி ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் ராஜஸ்தானுக்கு ‘பிளே-ஆப்’ சுற்று கதவு திறக்கலாம்.
மற்றபடி அந்த அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து விட்டது என்றே சொல்ல வேண்டும்.
ராஜஸ்தான் அணியின் செயல்பாடு சீராக இல்லை. பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் (4 அரைசதத்துடன் 356 ரன்) தவிர மற்றவர்களின் ஆட்டம் மெச்சம்படி இல்லை. பந்து வீச்சில் ஹசரங்கா, ஜோப்ரா ஆர்ச்சர் ஓரளவு கைகொடுக்கிறார்கள். ஆனால் முக்கியமான கட்டத்தில் கோட்டை விட்டுவிடுகிறார்கள்.
டெல்லி, லக்னோ, பெங்களூரு ஆகிய அணிகளுக்கு எதிரான முந்தைய ஆட்டங்களில் நெருங்கி வந்து தோல்வியை தழுவினார்கள். காயத்தால் அவதிப்படும் கேப்டன் சஞ்சு சாம்சன் இந்த ஆட்டத்திலும் ஆடுவது சந்தேகம் தான்.
அவர் உடல்தகுதியை எட்டாவிட்டால் ரியான் பராக் அணியை வழிநடத்துவார். இந்த சீசனில் சொந்த ஊர் மைதானத்தில் வெற்றி பெறாத ஒரே அணியான ராஜஸ்தான் அந்த சோகத்துக்கு முடிவு கட்டுமா என்பதை பார்க்கலாம்.
சூப்பர் பார்மில் உள்ள குஜராத் அணி 6 வெற்றி, 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று வலுவான நிலையில் காணப்படுகிறது. அந்த அணி பேட்டிங்கில் பலம் வாய்ந்ததாக திகழ்கிறது. முதலில் பேட் செய்த எல்லா ஆட்டங்களிலும் 180 ரன்களுக்கு மேல் குவித்து இருக்கிறார்கள். தமிழகத்தின் சாய் சுதர்சன் (5 அரைசதத்துடன் 417 ரன்), கேப்டன் சுப்மன் கில் (305 ரன்), ஜோஸ் பட்லர் (356 ரன்), ரூதர்போர்டு ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக ஆடுகிறார்கள்.
பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா (16 விக்கெட்), முகமது சிராஜ் (12 விக்கெட்), சாய் கிஷோர் (12 விக்கெட்) மிரட்டுகிறார்கள்.
இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த ஆட்டத்தில் குஜராத் 58 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. அந்த ஆதிக்கத்தை நீட்டிக்கும் வேட்கையுடன் ஆயத்தமாகிறது.