“காஷ்மீர் பிரச்சினையைப் பொறுத்தவரையில் மத்திய அரசு எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் தமிழ்நாடு நிச்சயமாக உறுதுணையாக இருக்கும்” – முதல்வர் ஸ்டாலின் உறுதி!!

சென்னை:
“காஷ்மீர் பிரச்சினையைப் பொறுத்தவரையில் மத்திய அரசு எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் தமிழ்நாடு நிச்சயமாக உறுதுணையாக இருக்கும் என்றுதான் நாங்கள் கூறியிருக்கிறோம்.

எனவே, எந்த காரணத்தைக் கொண்டு தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மதவாதம் உள்ளே நுழைய முடியாது” என்று பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்.28) பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன், தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக இருப்பதாக பேசியிருந்தார். அதற்கு அவை முன்னவர் துரைமுருகன், மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் பதிலளித்து பேசினர்.

இதைத் தொடர்ந்து பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “உறுப்பினர் வானதி சீனிவாசன் உரையாற்றியபோது ஆடிட்டர் ரமேஷ் தொடர்பான கொலை பற்றிக் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.

அந்தக் கொலை என்பது அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்தது. அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதேபோன்று, காஷ்மீரில் நிகழ்ந்தது போன்று நடக்கக்கூடாது என்று இங்கே பேசியிருக்கிறார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அதுபோன்று நிச்சயமாக நடைபெறவே நடைபெறாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். காஷ்மீரில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக பேசும்போதுகூட, மத்திய அரசினுடைய பாதுகாப்பு குறைபாடு பற்றி இதுவரை நாங்கள் பேசவில்லை.

அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன், நான் தெளிவாகக் குறிப்பிட்டது என்னவென்று கேட்டால், காஷ்மீர் தொடர்பான பிரச்சினையைப் பொறுத்தவரையிலே, மத்திய அரசு எடுக்கக்கூடிய எந்த நடவடிக்கையாக இருந்தாலும், தமிழ்நாடு நிச்சயமாக உறுதுணையாக இருக்கும் என்றுதான் நாங்கள் சொல்லியிருக்கிறோம்.

எனவே, எந்தக் காரணத்தைக்கொண்டும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மதவாதம், உள்ளே நுழைய முடியாது, என்பதை நான் தெளிவோடு சொல்லிக் கொள்கிறேன்.

அடுத்து, தமிழ்நாட்டை developed nation உடன் ஒப்பீடு செய்ய வேண்டுமென்று பேசினார். அதற்காக உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவரது பாராட்டுக்கு நன்றி. அதேநேரத்தில், நமது தமிழக அரசுக்கு மத்திய அரசினுடைய நிதி வராமல் இருக்கின்ற செய்தி உங்களுக்குத் தெரியும். இது developed nation அளவிற்கு ஒப்பிட வேண்டுமென்று சொன்னால், இன்னும் பல திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நாங்கள் காத்திருக்கிறோம், தயாராக இருக்கிறோம்.

எனவே, நீங்கள் தயவுசெய்து உங்கள் தலைமையிடத்திலே சொல்லி, அந்த நிதியைப் பெற்றுத் தருவதற்கான குரலைக் கொடுக்க வேண்டும் தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு வரவேண்டிய நிதி என்ன ஆனது? அதற்காக எவ்வளவோ குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான், நிதி கொடுக்கப்படும் என்று மத்திய அமைச்சரே இங்கு வந்து சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். நாடாளுமன்றத்திலும் இதற்காக நாங்கள் குரல் கொடுத்திருக்கின்றோம். அதற்காக வெளியிலே வந்து போராட்டமே நடத்திக்கொண்டிருக்கிறோம்.

இதே சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டும் அனுப்பியிருக்கிறோம். இதெல்லாம் உறுப்பினர் வானதி சீனிவாசனுக்குத் தெரியாதா? எனவே, இப்பொழுதாவது இதுகுறித்துப் பேசிய காரணத்தாலே, நிதியைப் பெற்றுத் தருவதற்கு நீங்கள் உரிமையோடு குரல் கொடுத்து அதைப் பெற்றுத்தர வேண்டும்,” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *