”பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அறிவிப்பு படி மே 13-ந்தேதி தீர்ப்பு வெளியாகுமா”?

கோவை:
பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று. கல்லூரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்தப்பட்டனர்.

இதுதொடர்பான வீடியோ வெளியானதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது.

முதலில் இந்த வழக்கை பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரித்தனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்த நிலையில் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்டது.

சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டு திருநாவுக்கரசு (வயது 25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27), மணிவண்ணன் (28), ஹெரன்பால் (29), பாபு (27), அருளானந்தம் (34) மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

இவர்கள் மீது 2019 மே 21-ந் தேதி கோவை மகளிர் கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன்பிறகு வழக்கு விசாரணை தாமதம் ஆனது. அதைத்தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் தனியாக அறை ஒதுக்கி விசாரணை தொடங்கப்பட்டது.

மகளிர் கோர்ட்டு நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் கடந்த 2023 பிப்ரவரி 24-ந் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது. அறைக்கதவுகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக சாட்சியம் பெறப்பட்டது.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் காணொலி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டு வந்தனர். இந்த வழக்கில் சாட்சி விசாரணை, அரசு மற்றும் எதிர் தரப்பு இறுதிவாதம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பு மே 13-ந் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார்.

இந்தநிலையில் நேற்று தமிழகம் முழுவதும் 77 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களில் பொள்ளாச்சி வழக்கை விசாரித்து வரும் நீதிபதி நந்தினிதேவியும் ஒருவர். அவர் கரூர் மாவட்ட குடும்ப நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார்.

நீதிபதி நந்தினிதேவி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதால் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அறிவித்த தேதியில் தீர்ப்பு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


வழக்கமான நடைமுறைப்படி தீர்ப்பை தள்ளிவைத்த நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டால் அவர் தீர்ப்பை எழுதி கையெழுத்திட்டு சென்றால் அந்த தீர்ப்பை புதிதாக பொறுப்பேற்கும் நீதிபதி அறிவிக்கலாம்.

அவ்வாறு தீர்ப்பு எழுதப்படவில்லை என்றால் புதிதாக பொறுப்பேற்கும் நீதிபதி மீண்டும் அரசு தரப்பு மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு வக்கீல்களின் வாதங்களை கேட்டு தீர்ப்பை அறிவிக்கலாம் என மூத்த வக்கீல்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோவையைச் சேர்ந்த மூத்த வக்கீல் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-


இந்த வழக்கு மிக முக்கியமான வழக்கு. மாவட்ட நீதிமன்றங்களில் நடக்கும் விசாரணை தீர்ப்பை அதுவரை விசாரித்த நீதிபதியே அறிவித்தால் தான் சரியானதாக இருக்கும் என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளது.

மேல்முறையீட்டு வழக்குகளில் இதுபோன்ற கருத்துக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே பொள்ளாச்சி வழக்கு விசாரணையை விசாரித்த நீதிபதியே தீர்ப்பு வழங்கும் வரை தொடர வேண்டும் என்று வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் அல்லது வழக்கை தொடுத்த பாதிக்கப்பட்ட புகார்தாரர்கள் மனு செய்ய வாய்ப்பு உள்ளது. இதற்கு சட்டத்தில் டேமணர் என்று கூறுவார்கள்.

அல்லது புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதி அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் வழக்கு விசாரணையை படித்து பார்த்து தீர்ப்பு கூறவும் வாய்ப்பு உள்ளது.

அதேசமயம் விசாரணையை முழுவதுமாக படித்து சாட்சியங்கள் குறித்து ஆராய வேண்டியிருந்தால் தீர்ப்பின் தேதி தள்ளி போகலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே மறுஉத்தரவு வரும் வரை நீதிபதி நந்தினிதேவி அதேகோர்ட்டில் பணிபுரிவார் என்று சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் அலுவலகத்தில் இருந்து மகளிர் கோர்ட்டிற்கு தகவல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே நீதிபதி நந்தினிதேவி, பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு அளித்த பிறகே இடமாறுதலாகி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *