234 தொகுதியிலும் வெல்வோம் என கூறிக்கொண்டிருக்கும் திமுகவினரின் தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன் – தமிழிசை சவுந்தரராஜன்!!

சென்னை:
234 தொகுதியிலும் வெல்வோம் என கூறிக்கொண்டிருக்கும் திமுகவினரின் தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

சென்னை விருகம்பாக்கத்தில் பாஜக சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் உழைக்கும் தொழிலாளர்கள் யாரும் மகிழ்ச்சியாக இல்லை.

தமிழகத்தில் ஏறக்குறையை 14 ஆயிரம் தற்காலிக செவிலியர்கள் உள்ளனர். அவர்களுக்கு எந்த சலுகையும் கிடையாது.

விடுப்பு கிடையாது. நிரந்தர செவிலியர்களின் ஊதியத்தில் பாதிதான் அவர்கள் வாங்குகிறார்கள். தற்காலிக செவிலியர்களின் பணியிடங்களை இன்னும் நிரந்தரமாக்கவில்லை.

அதேபோல், 6,000-க்கும் மேல் காலி பணியிடங்கள் இருந்தும் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் கிடைக்காமல் இன்னும் போராடி கொண்டிருக்கின்றனர்.

டாஸ்மாக், மருத்துவம், காவல்துறை என எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் காலி பணியிடங்கள் அதிகமாக இருக்கிறது.

தேர்வானவர்கள்கூட இன்னும் பணி நியமனம் செய்யப்படாமல் இருந்து கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசு இதற்கு பதில் சொல்லியாக வேண்டும். திமுக அரசு வெறும் விளம்பரம் மட்டுமே செய்து கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதியிலும் வெல்வோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களது தன்னம்பிக்கையை நான் பாராட்டுகிறேன்.

ஆனால், மக்கள் அனைவரும் அந்த கூட்டணிக்கு எதிராக தான் இருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு மறுக்கப்பட்டது. எடுக்கப்பட்ட கணக்கெடுப்பைக்கூட வெளியிடவில்லை.

ஆனால், நாங்கள் சொன்னதால் தான் சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்படுக்கிறது என திமுகவும், காங்கிரஸும் சொல்வது வேடிக்கையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *