சென்னை;
சென்னையில் பெண்களுக்காக பிங்க் ஆட்டோ வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்த வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாக பாதுகாப்புடன் பயணம் செய்ய ஏதுவாக பெண்களுக்கான உதவி எண் மற்றும் ஜி.பி.எஸ் கருவிபொருத்தப்பட்ட இளஞ்சிவப்பு ஆட்டோசேவை நடைமுறைபடுத்தப்படும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் சட்டப்பேரவை அறிவித்தார்.
இதனையடுத்து ரூபாய் ஒரு இலட்சம் மானியம் மற்றும் வங்கி கடனுதவியுடன் கடந்த 8 மார்ச் 2025ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் இத்திட்டத்தை தொடங்கி வைக்கப்பட்டு இளஞ்சிவப்பு ஆட்டோ வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்களை, ஆண்கள் சிலர் சென்னையில் பல இடங்களில் ஓட்டிவருவதாக புகார்கள் எழுந்தன
இதுதொடர்பாக சமூக நலத்துறை கள ஆய்வுகுழு கடந்த சில நாட்களாக ஆய்வுகளை மேற்கொண்டனர், இதில் சில ஆண்கள் ஓட்டுவதாக கண்டறியப்பட்டது.
தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளின் கீழ், இளஞ்சிவப்பு ஆட்டோக்களை பெண்கள் மட்டுமே இயக்க ஆணையிடப்பட்டுள்ளது.
இந்த விதிகள் பற்றி இளஞ்சிவப்பு ஆட்டோ இயக்கும் பயனாளிகளுக்கு பலமுறை எடுத்துரைத்த பின்னரும் ஆண்கள் ஓட்டுவது கண்டறியப்பட்டு விதிகளை மீறினால் ஆர்.டி.ஓ மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சமூக நலத்துறையால் எச்சரிக்கப்பட்டது.
இந்த நிலையில், சமூக நலத்துறை ரீதியாக எச்சரிக்கை விடப்பட்ட பின்னரும் தொடர்ந்து ஆண்கள் சிலர் இளஞ்சிவப்பு ஆட்டோ இயக்கி வருவது கண்டறியப்பட்ட நிலையில் 2 இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், இது போல் இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே எச்சரித்துள்ளார்.