சென்னை:
நீதித்துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் வகையில் நீதிபதிகளின் சொத்து விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய சுப்ரீம்கோர்ட்டு கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முடிவு செய்தது.
அதன்படி தற்போது பதவியில் உள்ள நீதிபதிகளின் சொத்து விவரங்களை நீதிமன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு வருகிறது.
சுப்ரீம்கோர்ட்டில் 33 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 21 பேரின் சொத்துகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கொலீஜியத்தில் உள்ள 5 நீதிபதிகளும் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர்.
மேலும் 2 பெண் நீதிபதிகளில் ஒருவர் சொத்து மதிப்பு விவரங்களை தெரிவித்துள்ளார். அனைத்து சொத்து மதிப்பு விவரங்களும் சுப்ரீம்கோர்ட்டின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.
இந்த சொத்துகளில் நீதிபதிகளின் சொத்துகள், குடும்ப உறுப்பினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகள், தங்கம், பங்குச்சந்தைகளில் முதலீடு உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இருக்கிறார். அவர் வருகிற 13-ந்தேதி ஓய்வு பெறுகிறார். அவரது வங்கியில் நிரந்தர வைப்பு கணக்கில் ரூ.55.75 லட்சம் உள்ளது.
தெற்கு டெல்லியில் 3 படுக்கை அறைகள் கொண்ட டி.டி.ஏ. பிளாட் மற்றும் காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தில் 2,446 சதுர அடி கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு (4 படுக்கை அறை) ஆகியவை அவருக்கு சொத்துக்களாக இருக்கிறது.
மேலும், குர்கான், இமாச்சலபிரதேச வீடுகளில் பங்கும் இருக்கிறது. வருங்கால வைப்பு நிதியில் இருந்து ரூ.1.06 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளார். 250 கிராம் தங்கம், 2 கிலோ வெள்ளி இருக்கிறது. 2015 மாருதி சுவிப்ட் கார் உள்ளது.
அடுத்த தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள பி.ஆர்.கவாய் வங்கி கணக்கில் ரூ.19.63 லட்சம் இருக்கிறது.
மராட்டிய மாநிலம் அமராவதி, மும்பை பாந்த்ரா, டெல்லியில் அடுக்கு மாடி குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்கள் அவருக்கு சொத்துக்களாக இருக்கிறது. ரூ.5.25 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் இருக்கிறது.
எஞ்சிய நீதிபதிகளின் சொத்து விவரங்களும் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.