தமிழக அரசும், போலீசாரும் நினைத்தால் ஒருவாரத்தில் கஞ்சா நடமாட்டத்தை கட்டுபடுத்தலாம் – ராமதாஸ்!!

திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது;-

ஆந்திரா, ஒடிசா போன்ற 96 தொகுதிகளுக்கு பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று 3-வது முறையாக மோடி மீண்டும் ஆட்சி அமைப்பார்.

ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்பதை பா.ம.க. வலியுறுத்தி வருகிற நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

ஜாதிவாரி கணக்கெடுப்பு பீகார், ஆந்திரா, கந்நாடகாவில் நடத்தப்பட்டு வருகிறது. தெலுங்கானாவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனியும் மத்திய அரசு தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென காலம் கடத்தாமல், தமிழ்நாடு அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்

சமூகநீதி பற்றி சில கட்சிகள் பேசினாலும், விடாமல் பேசி வருவது பா.ம.க. தான். சமூக நீதி விவகாரத்தில் செய்த தவறுகளை தி.மு.க. அரசு திருத்திக்கொள்ள வேண்டும். தமிழக அரசு நினைத்திருந்தால் ஒரு மாதத்தில் இடஒதுக்கீடு வழங்கி இருக்கலாம். ஆனால் 2 ஆண்டுகளாகியும் இடஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கவில்லை.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி போட்டியிட முடிவு செய்யப்படும். மேகதாதுவில் அணைகட்டுவோம் என அம்மாநில அரசு கூறுவது கண்டிக்கதக்கது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் குரல் கொடுக்க வேண்டும். ஆனால் அவர் அமைதி காத்து வருகிறார்.

தமிழகத்தில் தெருவுக்கு தெரு கஞ்சா போதை பொருட்கள் தாராளமாக கிடைப்பதால், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கஞ்சா புகைத்துவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை தமிழக அரசும், போலீசாரும் நினைத்தால் ஒருவாரத்தில் கஞ்சா நடமாட்டத்தை கட்டுபடுத்தலாம். போலீசாருக்கு தெரிந்தே கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.

இது தொடர்பாக கைது செய்யப்படுபவர்கள் மறுநாளே விடுதலை ஆகின்றனர். ஆந்திராவிலிருந்து கஞ்சா வருவதாக கூறும் போலீசார், ஆந்திராவிற்கே சென்று கஞ்சா தோட்டங்களை அழிக்கலாம். அதனை ஏன் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *