மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் 108 வைணவ தலங்களில் ஒன்றான அழகர்கோவில் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா உலக புகழ் பெற்றதாகும். மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 8-ந்தேதியும், தேரோட்டம் 9-ந்தேதியும் நடைபெற்றது.
திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என்று போற்றி அழைக்கப்படுவதும், 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றானதுமான மதுரை மாவட்டம் அழகர் கோவில் மலையடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்திற்காக சுந்தரராஜ பெருமாள் தங்கப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் 18-ம் படி கருப்பண சுவாமி உத்தரவு பெற்று அழகர்கோவிலில் இருந்து மதுரைக்கு புறப்பட்டார்.
இந்நிலையில் இன்று காலை 5.45 மணி முதல் 6.05 மணிக்குள் தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வந்த கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
தண்ணீரை பீய்ச்சி அடித்து கள்ளழகரை வரவேற்ற பக்தர்கள், ‘கோவிந்தா கோவிந்தா’ என பக்தி முழக்கத்துடன் வழிபாடு செய்தனர். இதனைத்தொடர்ந்து காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவத்தை தொடர்ந்து ராமராயர் மண்டகபடியில் கள்ளழகரை குளிர்விக்கும் தீர்த்தவாரி நடக்கிறது. 13-ந்தேதி காலையில் சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் அழகர் காட்சி தருகிறார்.
தொடர்ந்து அன்று மாலையில் கருட வாகனத் தில் பிரசன்னமாகி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
அதனைத் தொடர்ந்து இரவு முதல் மறுநாள் காலை வரை விடிய, விடிய தசாவதார காட்சி நடைபெறும். 14-ந்தேதி மதியம் ராஜாங்க திருக்கோலத்தில் அழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
அன்று இரவு பூப்பல்லக்கு விழா நடைபெறும். 15-ந் தேதி மதுரையில் இருந்து கள்ளழகர் மலைக்கு திரும்புகிறார். 17-ந்தேதி உற்சவ சாற்று முறையுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.
அழகர்கோவில் புறப்பாடு முதல் மீண்டும் கோவிலுக்கு திரும்பும் வரை சுமார் 494 மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளுகிறார்.
100-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும், சி.சி.டி.வி. கேமராக்கள் அமைத்தும் பாதுகாப்பு பணிகளை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.