விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு அருகே 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வைஷ்ணவி – கௌமாரி – பௌத்த சிற்பங்கள் கண்டெடுப்பு!!

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு அருகே 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வைஷ்ணவி – கௌமாரி – பௌத்த சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு அருகே அமைந்துள்ளது ஆலகிராமம். இப்பகுதியைச் சேர்ந்த சி.சுந்தரமூர்த்தி என்பவர் அளித்தத் தகவலின் பேரில் விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த பௌத்த சிற்பம் உள்ளிட்ட சிற்பங்கள் இருப்பது கண்டறியப்பட்டன.

இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது:

ஆலகிராமம் செக்கடி தெரு சந்திப்பில் பாதியளவு மண்ணில் புதைந்தும் புதர்கள் அடர்ந்துள்ள பகுதியில் இந்த சிற்பம் காணப்படுகிறது. சிற்பத்துக்கு உரியவர் வைஷ்ணவி தேவி ஆவார்.

நான்கு கரங்களுடன் அமர்ந்த நிலையில் காட்சிதருகிறாள். இங்கிருக்கும் செல்லியம்மன் கோயில் வளாகத்தில் இந்த சிற்பம் காணப்படுகிறது. இவர் கௌமாரி ஆவார். வைஷ்ணவி, கௌமாரி சிற்பங்கள் சோழர் காலத்தைச் (கி.பி.10ஆம் நூற்றாண்டு) சேர்ந்தவை.

இதனை மூத்த தொல்லியலாளர் கி.ஸ்ரீதரன் உறுதிப்படுத்தி இருக்கிறார். ஒரு காலத்தில் இவை சிவன் கோயில் வளாகத்தில் இருந்திருக்க வேண்டும். எப்படியோ வெவ்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளன.

ஜெயினர் கோயில் தெரு ஓரத்தில் புதர்கள் மண்டிய இடத்தில் இந்த சிற்பம் காணப்படுகிறது. அமர்ந்த நிலையில் இரண்டு கரங்களுடன் காட்சி தருகிறார். பிண்ணனியில் ஐந்து தலை நாகம் காட்டப்பட்டுள்ளது.

இவர் பௌத்த சமயத்தைச் சார்ந்த அவலோகிதேஸ்வரர் ஆவார். இந்த 3 சிற்பங்களும் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தவை. மேலும் இப்பகுதியில் கல்வெட்டுடன் கூடிய பலகைக் கல் ஒன்று மண்ணில் புதைந்துள்ளதால் இதிலுள்ள தகவலை அறிய இயலவில்லை.

ஆலகிராமத்தில் ஏற்கனவே பல்லவர் காலத்தைச் சேர்ந்த மூத்த தேவி, ஐயனார், முருகன், லகுலீசர், விஷ்ணு சிற்பங்கள் அமைந்துள்ளன. தற்போது சோழர் கால சிற்பங்களும் கண்டறியப்பட்டிருப்பது இந்த கிராமத்தின் வரலாற்று சிறப்பை நமக்கு உணர்த்துகின்றன.

ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த சிற்பங்களை கிராம மக்கள் உரிய முறையில் பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு செங்குட்டுவன் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *