குஜராத்- லக்னோ அணியுடன் இன்று மோதல்!!

சென்னை:
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.


இதில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 64-வது லீக் ஆட்டத்தில் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ், அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

முன்னாள் சாம்பியனான குஜராத் அணி 12 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 3 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருப்பதுடன், முதல் அணியாக அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) அடியெடுத்து வைத்தது. அந்த அணி கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது.

புள்ளி பட்டியலில் டாப்-2 பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோல்வி பெறும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்கும்.

இதனால் முதல் இரு இடங்களுக்குள் நீடிக்க குஜராத் அணி தீவிரமாக உள்ளது. பெங்களூரு, பஞ்சாப் (தலா 17 புள்ளி) அணிகள் முதல் இரு இடத்துக்கான ரேசில் நெருக்கமாக இருக்கின்றன.

குஜராத் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பலம் வாய்ந்ததாக திகழ்கிறது. பேட்டிங்கில் ரன் குவிப்பில் முதலிடத்தில் இருக்கும் சாய் சுதர்சன் (ஒரு சதம், 5 அரைசதம் உள்பட 617 ரன்), கேப்டன் சுப்மன் கில் (601), ஜோஸ் பட்லர் (500) அசத்தி வருகின்றனர்.

பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா (21 விக்கெட்), முகமது சிராஜ், சாய் கிஷோர் (தலா 15 விக்கெட்) கலக்குகிறார்கள்.

இன்னொரு பக்கம் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி 12 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகள் எடுத்து 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி கடந்த ஆட்டத்தில் ஐதராபாத்திடம் வீழ்ந்ததன் மூலம் அடுத்த சுற்று வாய்ப்பை பறிகொடுத்தது. அத்துடன் கடைசி 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியுள்ளது.

அந்த அணியில் பேட்டிங்கில் நிகோலஸ் பூரன் (455 ரன்), மிட்செல் மார்ஷ் (443), மார்க்ரம் (409), ஆயுஷ் பதோனி கைகொடுக்கிறார்கள். ஆனால் கேப்டன் ரிஷப் பண்டின் ஆட்டம் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இல்லை.

இதுவரை ஒரு அரைசதம் உள்பட 135 ரன்களே எடுத்துள்ளார். பந்து வீச்சில் கவனத்தை ஈர்க்கும் வகையில் பந்து வீசிய சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதி, முந்தைய ஆட்டத்தில் ஐதராபாத் பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டது.

இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர் ஆடமுடியாது. இது அந்த அணிக்கு பெரிய இழப்பாகும்.

மொத்தத்தில் லக்னோவுக்கு எதிராக ஏற்கனவே 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்ட குஜராத் அணி அதற்கு பதிலடி கொடுப்பதுடன் உள்ளூரில் ஆதிக்கத்தை நிலைநாட்ட வரிந்துகட்டி நிற்கும். அதே நேரம் அவர்களின் வெற்றிப்பயணத்துக்கு முட்டுக்கட்டை போட லக்னோ முழுவீச்சில் போராடும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.


போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

குஜராத்: சுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், ரூதர்போர்டு, ஷாருக்கான், ராகுல் திவேதியா, ரஷித் கான், கசிசோ ரபடா, அர்ஷத் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.


லக்னோ: மிட்செல் மார்ஷ், மார்க்ரம், ரிஷப் பண்ட் (கேப்டன்), நிகோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, அப்துல் சமத், ஷர்துல் தாக்குர், ரவி பிஷ்னோய், ஆகாஷ் தீப், ஆவேஷ் கான், ஷபாஸ் அகமது அல்லது எம்.சித்தார்த், வில்லியம் ஓ ரூர்கே.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *