பேரூர்:
கோவை மாவட்டத்தில் உள்ள கோவை குற்றாலம் அருவி சுற்றுலா தலங்களுக்கு பெயர் பெற்றது. இங்கு ஆண்டுதோறும் பெரும்பாலான நாட்களில் தண்ணீர் வரத்து இருக்கும்.
எனவே கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலத்துக்கு வந்திருந்து, அங்குள்ள அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ச்சியுடன் திரும்புகின்றனர்.
இதற்கிடையே மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் வனத்துறை ஊழியர்கள் இன்று காலை கோவை குற்றாலம் அருவியின் நீர்வரத்து அம்சங்களை பார்வையிடுவதற்காக வந்திருந்தனர். அப்போது அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து கோவை குற்றாலம் அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை குறைந்து கோவை குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து இயல்பு நிலைக்கு வந்ததும் அங்கு பொதுமக்கள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.