சவுதி அரேபியாவிலிருந்து தங்கத்தை மாத்திரைகளாக்கி கடத்தல்!!

புதுடெல்லி:
சவுதி அரேபியாவிலிருந்து உத்தர பிரதேசத்தின் லக்னோ விமான நிலையம் வந்தடைந்த 6 பேர், கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி-லக்னோ நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

பழைய சுங்கச்சாவடி அருகே சென்ற அந்த காரை, போலீசார் என்று கூறிக் கொண்ட இரண்டு சகோதரர்கள் கடத்தி உள்ளனர்.

ஓட்டுநர் உள்ளிட்ட அனைவரையும் அப்பகுதியிலுள்ள ஒரு பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, அவர்களின் வயிற்றில் தங்கம் இருப்பதை அறிந்து அறுவை சிகிச்சை செய்து வெளியில் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே அங்கிருந்து தப்பிய கார் ஓட்டுநர், உள்ளூர் மக்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

கிராம மக்கள் மூலம் கிடைத்த தகவலின் பேரில் முராதாபாத் மற்றும் ராம்பூர் போலீஸார் சம்பவ இடத்துகு விரைந்துள்ளனர். பண்ணை வீட்டை சுற்றி வளைத்தபோது துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இறுதியில் 2 சகோதரர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொடுத்த தகவலால், காரில் பயணித்த அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது, நான்கு பேரின் வயிற்றில் 29 தங்க கேப்ஸ்யூல்கள் (மாத்திரை) இருப்பது தெரியவந்தது.

இவர்கள், ராம்பூரின் தாண்டா கிராமத்தைச் சேர்ந்த ஷேக் ஆலம், முத்தலிப், அசாருதீன் மற்றும் சுல்பிகார் ஆகியோர் ஆவர். இவர்களது வயிற்றில் இருந்த தங்கத்தின் மொத்த எடை சுமார் ஒரு கிலோ.

தங்க கடத்தல் வழக்கு என்பதால், அவர்களை போலீஸார் சுங்கத் துறையினரிடம் ஒப்படைத்தனர். கடத்தல்காரர்கள் அனைவரும் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர், மேலும் அவர்களின் வயிற்றில் இருந்து தங்கத்தை அகற்றும் பணி நடந்து வருகிறது.

இதுகுறித்து ராம்பூர் நகர காவல் துறை எஸ்பி குமார் ரண் விஜய் சிங் ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் கூறும்போது, ‘‘விசாரணையில் இவர்கள் சர்வதேச தங்கக் கடத்தல் கும்பலுக்காக குருவிகளாக பணியாற்றுபவர்கள்.

இவர்களுக்கு ஒரு சிறிய தொகை சன்மானமாக அளிக்கப்படுகிறது. இவர்களது பின்னணியில் சர்வதேச கடத்தல்காரர்கள் உள்ளனர்’’ என்றார்.

கடந்த வருடம் மார்ச் மாதம் உ.பி.யின் லக்னோ விமான நிலையத்தில் தொடர்ந்து மூன்று தினங்களாக ஷார்ஜா, துபாய் மற்றும் தமாமிலிருந்து வந்தவர்களில் 69 பயணிகள் கைது செய்யப்பட்டனர். இதில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள்.

இவர்கள் தங்கத்தை துகள்கள் மற்றும் பேஸ்ட் போலாக்கி உடலில் மறைத்து வைத்து கடத்தி வந்தனர்.

இவர்களின் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த லக்னோ விமான நிலையத்தின் சுங்கத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த கும்பலுக்கு தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதே கும்பலால் தற்போது மாத்திரை வடிவில் விழுங்கி தங்கம் கடத்தப்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *