சென்னை:
ராய்ப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குடியா கிராமத்தில் வசித்து வருபவர் தேசிய பதிவேடு குற்றவாளி தேஜ்பால் சிங் உதாவத். இவர், தனது ஜேசிபி டிரைவரை டீசல் திருடியதாக சந்தேகித்துள்ளார்.
இதற்கான தண்டனையாக டிரைவரை , தலைகீழாக ஜே.சி.பி இயந்திரத்தில் கட்டி வைத்து பெல்ட்டால் அடித்து சித்திரவதை செய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்த பகீர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் சுமார் 3 மாதங்களுக்கு முன் நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
அந்த வீடியோவில், டிரைவர் 3 மணி நேரம் பலவிதமான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு, காயங்களில் உப்பை தேய்க்கப்பட்டு கொடூரமாக துன்புறுத்தப்படுகிறார்.
தேஜ்பாலின் பண்ணை வீட்டில் இச்சம்பவம் நடந்ததாகவும் இதனை பலரும் அங்கு இருந்து வேடிக்கை பார்த்ததாகவும், தேஜ்பாலின் பயத்தால் யாரும் அந்த டிரைவரை காப்பாற்ற முன்வரவில்லை எனவும் தெரிகிறது.
தேஜ்பால் மீது ஏற்கனவே ராய்ப்பூர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சட்டவிரோத மணல் திருட்டு உட்பட பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் தேஜ்பாலை இந்த வீடியோ வெளியானதும் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்துள்ளனர்.