சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் 18 நக்சலைட்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரண்!!

சுக்மா:
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் 18 நக்சலைட்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) பாதுகாப்புப் படையினரிடம் சரண் அடைந்தனர். இவர்களில் 10 பேரின் தலைக்கு மொத்தமாக ரூ.38 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சுக்மா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சவான் கூறுகையில், “மாவோயிஸ்ட் சித்தாந்தம் வெறுமையானது மற்றும் மனித தன்மையற்றது என்று சரணடைந்தவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், உள்ளூர் பழங்குடியினர் மீதான வன்முறையிலும் உன்பாடில்லை என்றனர். இதுபோன்ற காரணங்களால் 18 நக்சலைட்கள் மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் சிஆர்பிஎஃப் அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்தனர்.

தொலைதூர கிராமங்களில் வளர்ச்சிப் பணிகளை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட மாநில அரசின் திட்டத்தாலும், சரணடைதல் மற்றும் மறுவாழ்வுக்கான புதிய கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

சரணடைந்தவர்களில், மாவோயிஸ்ட்களின் பிஎல்ஜிஏவின் பட்டாலியன் 1-ன் குழு உறுப்பினரான மத்கம் ஆய்தா மற்றும் அதே பட்டாலியனைச் சேர்ந்த உறுப்பினர் பாஸ்கர் மற்றும் போகம் லக்கா ஆகியோரின் தலைக்கு தலா ரூ.8 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.

சரணடைந்த நக்சலைட்களுக்கு ரூ.50,000 உதவித்தொகை அளிக்கப்பட்டது. மேலும் அவர்கள் அனைவரும் அரசின் கொள்கையின்படி மறுவாழ்வு சலுகைகளைப் பெறுவார்கள்.” என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு, சுக்மா உட்பட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தர் பிராந்தியத்தில் 792 நக்சலைட்டுகள் சரணடைந்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *