சத்குரு குறித்து பரவும் போலி விளம்பரங்களை நீக்க கூகுள் நிறுவனத் திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!!

கோவை,

சத்குரு குறித்து பரவும் போலி விளம்பரங்களை நீக்க கூகுள் நிறுவனத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொது மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் டீப்பேக் முறையில் சத்குருவின் படம் மற்றும் வீடியோக்கள் உருவாக்கப்பட்டு ஆன்லைன் தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

இதில் குறிப்பாக கூகுள் நிறுவனத்தின் ஒரு அங்கமான யூடியூப்பில், சத்குரு கைது செய்யப்பட்டதாக போலி விளம்பரங்கள் அதிகம் பகிரப்படுகின்றன. இவற்றை கூகுள் நிறுவனம் தடுக்க தவறியதாக கூறி சத்குரு மற்றும் ஈஷா அறக்கட்டளை சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

சத்குருவின் தனியுரிமை தொடர்பான இந்த வழக்கு, நீதிபதி மன்மீத் ப்ரீதம் சிங் அரோரா தலைமையிலான நீதிபதி அமர்வு முன்பு கடந்த 14-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அமர்வு சத்குரு கைது எனக் காட்டும் விளம்பரங்கள் தொடர்ந்து வெளியிடப்படுவதைக் கண்டித்ததுடன், அவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும் என கூகுள் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

மேலும், கூகுள் நிறுவனம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இதனைத் தடுக்க வேண்டும் எனவும் இதனை மேற்கொள்ள தொழில்நுட்ப தடைகள் அல்லது எதிர்ப்புகள் ஏதேனும் இருந்தால், அவற்றை விவரிக்கும் பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டது.

இதனுடன் கூகுள் நிறுவனமும் ஈஷா அறக்கட்டளையும் கலந்தாலோசித்து சத்குருவின் பெயரை தவறாகப் பயன்படுத்தும் விளம்பரங்களை அகற்றுவதற்காக மீண்டும் மீண்டும் புகார் அளிக்க வேண்டிய அவசியம் இல்லாத வகையில் சரியான ஒரு தீர்வை உருவாக்குமாறும் டெல்லி உயர்நீதிமன்றம் கூறியது.

டீப்பேக் மோசடி விளம்பரங்கள்

இவ்வழக்கில் கூகுள் நிறுவனம் பின்பற்ற வேண்டிய கொள்கைகள் மற்றும் அமல்படுத்த வேண்டிய அம்சங்கள் குறித்து ஈஷா சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

அதில் குறிப்பாக கைது, மரணம் போன்ற எதிர்மறையான வாழ்க்கை நிகழ்வுகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் ‘கிளிக்பைட்’ விளம்பரங்களை வெளியிடுவதற்கு எதிரான கொள்கையை கூகுள் நிறுவனம் கொண்டுள்ளது.

ஆனால் அந்த கொள்கையினை அந்நிறுவனம் பின்பற்றவில்லை என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

மேலும் ‘இடைத்தரகர் விதிகளின்’-படி, நீதிமன்ற உத்தரவின் காரணமாக ஏற்கனவே அகற்றப்பட்ட தகவலுடன் ஒத்த தகவல்கள் மீண்டும் இணையத்தில் பரவாமல் தடுக்க, அவற்றை அடையாளம் காண தானியங்கி தொழில்நுட்பங்கள் அல்லது பிற வழிமுறைகள் உள்ளிட்ட தொழில்நுட்ப ரீதியிலான நடவடிக்கைகளைப் பயன்படுத்த கூகுள் நிறுவனம் கடமைப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

முன்னதாக, கடந்த மே மாதம் 30-ஆம் தேதி, சத்குரு தொடர்பாக பரப்பப்படும் போலி மோசடி ஆன்லைன் பதிவுகளை நீக்க, இடைக்கால உத்தரவினை பிறப்பித்தது.

ஆனால் அந்த உத்தரவுக்குப் பிறகும் யூடியூப்பில் சத்குருவை கைது செய்ததாகக் கூறும் மற்றும் போலியான முதலீட்டு திட்டங்களைப் பிரசாரம் செய்யும் டீப்பேக் மோசடி விளம்பரங்கள் அதிகரித்துள்ளன.

ஈஷா அறக்கட்டளை, இத்தகைய போலியான மற்றும் தவறான உள்நோக்கம் கொண்ட வீடியோக்கள் மற்றும் படங்களை நீக்குவதிலும், பொதுமக்கள் மோசடிகளுக்கு உள்ளாகாமல் இருக்கவும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

பொதுமக்கள் எச்சரிக்கையாக இருந்து, யூடியூப்பில் “சத்குரு கைது செய்யப்பட்டார்” எனக் கூறும் போலியான வீடியோக்கள் அல்லது விளம்பரங்களைப் பார்த்தால், அவற்றை “Scam” அல்லது “Misleading” எனக் குறிப்பிட்டு புகாரளிக்குமாறு ஈஷா அறக்கட்டளை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *