வால்பாறை:
கோவை மாவட்டத்திற்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதுமே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் வால்பாறை, பொள்ளாச்சி பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் பெய்யும் மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து சாலைகளில் விழுந்துள்ளன. சில எஸ்டேட் பகுதிகளில் மின் கம்பங்கள் மரம் விழுந்து, அங்கு மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
மழையால் வால்பாறையில் உள்ள நடுமலையாறு, கூழாங்கல் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நீர்வீழ்ச்சிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
நேற்றும் வால்பாறை, பொள்ளாச்சியில் கனமழை பெய்தது. இந்த மழைக்கு வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் 20-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் ராட்சத மரம் முறிந்து விழுந்து சாலையில் குறுக்கே விழுந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை துறையினர் மரங்களை வெட்டி போக்குவரத்தை சரி செய்தனர்.
பொள்ளாச்சி நகரில் பெய்த கனமழைக்கு பாலக்காடு சாலை, பல்லடம் சாலை, கோவை சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வாகனங்கள் அந்த சாலைகளில் மெல்ல மெல்ல ஊர்ந்து செல்வதை காண முடிந்தது.
பொள்ளாச்சி நகராட்சி 33-வது வார்டில் மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் வீடு ஒன்று இடிந்து விழுந்தது.
நெகமம் பகுதிகளில் பெய்து வரும் மழைக்கு தென்னந்தோப்புகளில் மரம் முறிந்து விழுந்தது. நெகமத்தில் இருந்து பெரியபெட்டி செல்லும் ரோட்டில் என்.சந்திராபுரத்தில் உள்ள பழமையான மரம் வேருடன் சாய்ந்து அருகே இருந்த மின்கம்பம் மீது விழுந்தது.
தகவல் அறிந்த மின்வாரியத்தினர் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நெகமம் செட்டியாக்காபாளையம், கக்கடவு, காணியாலம்பாளையம் பகுதிகளில் மழைக்கு 3 வீடுகள் சேதம் அடைந்தன.