“நீட் மட்டும்தான் உலகமா? நீட்டை தாண்டியும் உலகம் இருக்கு; அது ரொம்ப பெருசு” – விஜய் பேச்சு!!

மாமல்லபுரம்:
“நீட் மட்டும்தான் உலகமா? நீட்டை தாண்டியும் உலகம் இருக்கு. அது ரொம்ப பெருசு” என தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10, 12-ம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி கவுரவிக்கும் விழா இன்று மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நடக்கிறது.

இந்த விழாவில் முதற்கட்டமாக 88 தொகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிகழ்வில் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசிய தவெக தலைவர் விஜய், ‘இளம் தலைவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் வணக்கம். உங்க எல்லாரையும் சந்தித்ததில் பெரிய மகிழ்ச்சி.

உங்கள் எல்லாருக்கும் முதலில் வாழ்த்துகள். படிப்பில் சாதிக்கணும் என்பது முக்கியம்தான். அதுக்குன்னு ஒரே ஒரு படிப்புல மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து படிச்சு அதுல மட்டும் சாதிக்கணும்னு அழுத்தம் ஏத்திக்க தேவை இல்லை. நீட் மட்டும்தான் உலகமா? நீட்டை தாண்டியும் உலகம் இருக்கு. அது ரொம்ப பெருசு. அதுல நீங்க சாதிக்க நிறைய விஷயங்கள் இருக்கு.

ஜனநாயகத்தோடு இருங்க. ஜனநாயகவாதியா இருந்தாதான் சுதந்திரமா இருக்க முடியும். உங்க வீட்ல இருக்க எல்லார்க்கிட்டயும் அவங்க ஜனநாயகக் கடமையை சரியா செய்ய சொல்லுங்க.

ஜனநாயக கடமையை சரியாக செய்வது ரொம்ப எளிமையான விஷயம்தான். அதாவது நல்லவங்க, நேர்மையானவங்க, இதுவரைக்கும் ஊழல் பண்ணாத நல்லவங்கள நம்பிக்கையானவங்கள தேர்வு செய்ய சொல்லுங்க.

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இதே நிகழ்வுல, ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது, அந்த கலாச்சாரத்தை ஊக்குவிக்காதீங்கன்னு பெற்றோரிடம் சொல்லுங்க என்று சொல்லியிருந்தேன். அதை அப்படியே இப்பவும் பின்பற்றுங்க. ஆனா, நீங்களே பாருங்க. அடுத்த வருஷம் வண்டி வண்டியா பணத்தை கொண்டு வந்து கொட்ட போறாங்க. அது எல்லாமே உங்கக்கிட்ட இருந்து கொள்ளையடிச்ச பணம் அது. நீங்க என்ன பண்ண போறீங்க. என்ன பண்ணணும்னு உங்களுக்கு சரியா தெரியும்.

பெற்றோருக்கு ஒரு வேண்டுகோள். உங்க குழந்தைகள் மேல எந்த அழுத்தத்தையும் போடாதீங்க. அவங்களுக்கு என்ன பிடிக்குதுன்னு தெரிஞ்சு வழிநடத்துங்க. எத்தனை தடைகள் வந்தாலும் அவரவருக்கு பிடித்த துறைகளில் நிச்சயம் சாதித்து காட்டுவார்கள்.

சாதி மதத்தை வைத்து பிரிவினையை வளர்க்கிற சிந்தனை பக்கம் போய் விடாதீர்கள். விவசாயிகள் என்ன சாதி மதம் பார்த்தா விதைக்கிறாங்க? தொழிலாளர்கள் சாதி மதம் பார்த்தா தொழில் செய்கிறார்கள். இயற்கையோட வெயில் மழைல சாதி இருக்கா?. போதைப்பொருள் போல சாதி மதத்தையும் தூரமாக தள்ளிவைக்க வேண்டும்.

இப்போது பெரியாருக்கே சாதி சாயம் பூச முற்படுகிறார்கள். ஒன்றிய அரசின் சிவில் சர்வீஸ் தேர்வில் பெரியாருக்கு சாதி சாயம் பூசுவது போல கேள்வி கேட்டுள்ளார்கள். இந்த உலகில் எது சரி எது தவறு என யோசித்தாலே குழப்பம் இல்லாத வாழ்க்கையை வாழலாம்.

எதுக்கும் ரொம்ப எமோஷனல் ஆகாதீங்க. டெக்னிக்கல் மற்றும் அறிவியல் அப்ரோச் உடனே வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள். ஏஐ தொழில்நுட்பத்தை எதிர்கொள்ள அதுவே ஒரே வழி” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *