சென்னை:
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்புக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்கு செயலால் பதிலளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனையும் ரூ. 90 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
சிறையில் ஞானசேகரனுக்கு எந்த சலுகையும் வழங்கப்படக்கூடாது, தண்டனையை ஏக காலத்திற்கு அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மாணவி வன்கொடுமை வழக்கை சிறப்பாக விசாரித்த காவல்துறைக்கு நீதிபதி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்குச் செயலால் பதில் அளித்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை!
விசாரணையின் போது, உயர்நீதிமன்றமே பாராட்டிய வகையில், சென்னை மாணவி வழக்கினை நியாயமாகவும் விரைவாகவும் ஐந்தே மாதத்தில் நடத்தி முடித்து, குற்றவாளிக்குக் கடும் தண்டனையைப் பெற்றுத் தந்திருக்கிறோம்.
தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் இந்த வழக்கில் காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டுள்ளதாக மகளிர் நீதிமன்றமும் முன்வந்து பாராட்டி இருக்கிறது.
இளம்பெண் ஒருவருக்கு நிகழ்ந்த அநீதியில் கூட அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சின்ன புத்தி கொண்ட சிலரின் எண்ணம் இதனால் தவிடுபொடியாகியுள்ளது.
பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என அண்மையில் நாம் கொண்டு வந்த சட்டத்திருத்தத்துக்கு ஏற்ப, இவ்வழக்கில் remission உள்ளிட்ட எந்தச் சலுகையும் இல்லாமல் கடுங்காவல் தண்டனை விதித்துள்ள நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நன்றிகூறி வரவேற்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.