சென்னை;
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை ஞானசேகரன் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி பாலியல் வன்கொடுமை செய்தார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானசேகரனை கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் உள்ள மகளிர் கோர்ட்டில் மார்ச் மாதம் முதல் இந்த வழக்கின் விசாரணை தொடங்கியது.
பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 29 பேர் சாட்சியம் அளித்தனர். 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட அனைத்து பிரிவுகளிலும் ஞானசேகரன் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கும் குறையாத ஆயுள் தண்டனையும், ரூ.90 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட மாணவிக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “ஞானசேகரனுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை வரவேற்குரியது. பொதுமக்களிடையே ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
பெண்களின் பாதுகாப்பையும் இந்த தீர்ப்பு உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. வன்புணர்வு குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு இது ஒரு படிப்பினையாக அமையும். வன்புணர்வு குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு இந்த தீர்ப்பு ஏதுவாக அமையும்.