சென்னை:
சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் “குபேரா” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். “குபேரா” திரைப்படம் தனுஷின் 51-வது திரைப்படமாகும். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது.
படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஜூன் மாதம் 20-ந்தேதி வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தில் இசை வெளியீட்டு விழா நேற்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் தனுஷ் அவர் மீது சுமத்தும் நெகடிவ் விமர்சனங்களை பற்றி மிகவும் எமோஷனலாக பேசினார். அதன் பிறகு ரசிகர்களுக்கு ஒரு அன்பான அறிவுரை வழங்கினார்.
அதில் அவர் “சந்தோசமா இருங்க.. சந்தோசத்த வெளியே தேடாதீங்க.. சந்தோசம் உங்களுக்கு உள்ள தான் இருக்கு.. சந்தோஷம் ஒரு சாய்ஸ்.. நான் ஒரு வேலை சாப்பாட்டுக்கு வக்கில்லாமலும் இருந்திருக்கேன்.. இப்ப ஒரு நல்ல நிலமையில் இருக்கேன்.. எந்த நேரமும் சந்தோசத்த வெளிய தேடியது கிடையாது.. சந்தோசம் நிம்மதிக்கு மேல எதுவும் முக்கியம் கிடையாது.
நான் ரொம்ப குடுத்து வெச்சுருக்கணும்.. இவ்ளோ வருடம் கழித்தும் எல்லாரும் பேசும் போது அதை தாண்டி எனக்காக எல்லாரும் இருக்கீங்கல.. நான் ரொம்ப குடுத்து வெச்சுருக்கணும்.
நிறைய பேர் பல ஊர்கள்-ல இருந்து இங்க வந்திருக்கீங்க எல்லாரும் பத்ரமாக வீட்டுக்கு போய் சேருங்க.. பைக் ல ஃபாலோ பண்ணாதீங்க.. நான் அதை ஆதரிக்க மாட்டேன்.. உங்க சந்தோசத்த விட உங்க பாதுகாப்பு எனக்கு முக்கியம்.” என கூறினார்.