ரூ.300 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ரோபோட்டிக் பாகங்கள் உற்பத்தி ஆலையை காணொலி வாயிலாக நேற்று திறந்து வைத்தார் – முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

காஞ்சிபுரத்தில் ரூ.300 கோடியில் ரோபோடிக் பாகங்கள் உற்பத்தி ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாகத் திறந்துவைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2024-25-ம் ஆண்டில் 9.69 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. இது,கடந்த 10 ஆண்டுகளில் இம்மாநிலம் அடைந்த அதிகபட்ச வளர்ச்சியாகும். அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தமிழகத்தின் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு வளர்ச்சி பெறத் தேவையான முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

ஜெர்மனியைச் சேர்ந்த அஜைல் ரோபோட்ஸ் எஸ்இ நிறுவனம், செயற்கை நுண்ணறிவு சார்ந்த ரோபோடிக் இயந்திர பாகங்கள் உற்பத்தித் தொழிற்சாலையை காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் நிறுவியுள்ளது. ரூ.300 கோடி முதலீட்டில் உருவாகும் இந்த தொழிற்சாலையில், 300 உள்ளூர் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

காற்று பிரித்தெடுக்கும் ஆலை: இத்தாலியைச் சேர்ந்த எஸ்ஓஎல் ஸ்பிஏ மற்றும் இந்தியாவின் சிக்ஜில்சால் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் `எஸ்ஓஎல் இந்தியா’ நிறுவனமாகும். ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் அமைந்துள்ள இந்நிறுவனம், தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. 2019-ல் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது ரூ.100 கோடி முதலீடு மற்றும் 2024-ல் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது ரூ.200 கோடி முதலீடு செய்யும் வகையிலான திட்டங்களுக்கு இந்நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

2023-ல் ராணிப்பேட்டை சிப்காட்டில் இந்த ஆலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டிவைத்தார். தற்போது பணிகள் நிறைவடைந்து, ரூ.175 கோடியில் ஆலை நிறுவப்பட்டுள்ளது. இதில் 20 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஆலைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார்.

மேலும், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 6 மாணவர்களுக்கு உள்ளகப் பயிற்சி (Internship) அளிப்பதற்கான கடிதங்களையும் முதல்வர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலர் நா.முருகானந்தம், தொழில் துறைச் செயலர் வி.அருண்ராய், தொழில்வழிகாட்டி நிறுவன செயல் இயக்குநர் பு.அலர்மேல்மங்கை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *