மதுரை அருகே 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன் கோயில், கிராம மக்களால் வெளிக் கொணரப்பட்டுள்ளது – ஆய்வாளர்கள் பெருமிதம்!!

மதுரை:
மதுரை அருகே 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன் கோயில், கிராம மக்களால் வெளிக் கொணரப்பட்டுள்ளது. இது வரலாற்றுக்குப் புதிய வரவாகும் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் பெருமிதம் தெரிவித்தனர்.

இதுகுறித்து வரலாற்று ஆர்வலர்களும், சிற்பத்துறை, தொல்லியல் ஆய்வாளர்களுமான தேவி, அறிவுச் செல்வம் ஆகியோர் கூறியதாவது:

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் மலம்பட்டி ஊராட்சியின் சிற்றூர் உடன்பட்டி. இவ்வூரில் ஓட்டக்கோயில் அழைக்கப்பட்ட பழைய சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலின் அதிஷ்டானப் பகுதி முழுவதும் தமிழ் கல்வெட்டுகள் உள்ளன. அதில் இவ்வூரின் பழமையான பெயர் ‘ஆற்றூர்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிதைந்துபோன சிவன் கோயிலின் மூலவர் பெயர் தென்னவனீசுவரம். இங்குள்ள கல்வெட்டுகள் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தைச் சேர்ந்தது. கி.பி.1217-1218-ம் ஆண்டுகளில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.

அழகப்பெருமாள் எனும் களவழி நாட்டுத் தலைவன் தனக்கு உரிமையான நாகன்குடி என்னும் ஊரின் குளத்தையும், அதனைச் சுற்றியுள்ள நன்செய், புன்செய், தோட்டம், துரவு அனைத்தையும் ஆற்றூர் நம்பி பேரம்பலக் கூத்தன் என்னும் காங்கேயன் தலைவனுக்கு 64 காசுகளுக்கு விற்றுள்ளான் என்ற செய்தியை கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது.

இந்நிலங்களால் கிடைக்கும் வருவாய் இவ்வூரில் உள்ள தென்னவனீசுவரம் எனும் சிவன் கோயிலின் அன்றாடச் செலவுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மற்றுமொரு துண்டுக் கல்வெட்டு திருநோக்கு அழகியான் என்பான் தன் பெயரில் திருநோக்கு அழகிய விநாயகப் பிள்ளையாரையும், மற்ற பரிவார தெய்வங்களையும் இக்கோயிலில் எடுப்பித்தான் என்ற செய்தியைத் தருகிறது. இப்புதிய கல்வெட்டு மூலம் 800 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு சிவன் கோயில் இருந்தது என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கோயில் அமைப்பு: கோயில் அமைப்பு கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம், நுழைவு வாயில் என்று மிகப்பெரிய வளாகத்தில் அமைந்து தற்போது சிதைந்துள்ளது. இக்கோயிலில் பரிவார தெய்வங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, அம்மன் இருந்திருக்கிறார்கள்.

கல்வெட்டில் வரும் விநாயகர் திருமேனியைக் கண்டறிய வேண்டும். தட்சிணாமூர்த்தி சிலையின் தலைப்பகுதி வரை மண்மூடி இருந்தது.

அம்மன் சிலையானது சில ஆண்டுகளுக்கு முன்பு முல்லையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. இப்பொழுது தட்சிணாமூர்த்தியின் சிலை தோண்டி வெளிக்கொணரப்பட்டும், அம்மன் சிலையானது முல்லையாற்றின் மற்றொரு கரையில் எடுத்து வைக்கப்பட்டும் வழிபாடு செய்யப்படுகிறது. கோயில் அமைப்பைப் பார்க்கும்பொழுது சிகரம், கலசம் இல்லாமல் கட்டப்பட்ட பாண்டியர்களின் கோயிலாகத் தோன்றுகிறது.

கல்வெட்டை வாசித்த தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த உதயகுமார், முத்துப்பாண்டி, முருகன் ஆகியோர் இந்த ஆய்வுக்கு உதவியாக இருந்தனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *