ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் மறைவுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் !!

சென்னை
ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் மறைவுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் உளம் வருந்தினேன். நீதித்துறையின் மாண்பையும், சீரிய மரபையும் காத்துவந்தவர் என்பதுடன், கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது அருந்ததியருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு கொண்டுவருவதற்கான பரிந்துரையை அளித்த குழுவின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவராக இருந்தபோது, பிற்படுத்தப்பட்டோருக்கான தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான அறிக்கையினையும் தயாரித்து அளித்தவர் ஆவார்.

நீதியரசர் எம்.எஸ். ஜனார்த்தனம் மறைவு நீதித்துறைக்கு மட்டுமின்றி சமூகநீதி கருத்தியல் தளத்தில் இயங்கும் அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நீதித்துறை சார்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *