புதுடெல்லி,
நாட்டின் பல்வேறு வங்கிகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி குறுகிய கால கடன்கள் அளிக்கிறது.
அந்த கடன்களுக்கு பிற வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு வட்டி செலுத்துகின்றன. இந்த வட்டி விகிதம் ரெப்போ என்று அழைக்கப்படுகிறது.
இதனிடையே, நாட்டின் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி அவ்வப்போது மாற்றியமைப்பது வழக்கம்.
இந்நிலையில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா ரெப்போ வட்டி குறைப்பு தொடர்பான அறிவிப்பை இன்று வெளியிட்டார்.
இதன் மூலம் 6 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி தற்போது 5.50 சதவீதமாக குறைந்துள்ளது. வழக்கமாக 0.25 சதவீதம் குறைக்கப்படும் நிலையில், இம்முறை 0.50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 மாதங்களில் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 1 சதவீதம் குறைந்துள்ளது.
இந்த வட்டி குறைப்பு மூலம் வீடு, வாகன கடன்கள் மீதான வட்டி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை வங்கிகள் விரைவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.