புதுடெல்லி,
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடந்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த பணிகள் வருகிற 2027-ம் ஆண்டு தொடங்கப்படவுள்ளது.
இதுபற்றி கருத்து தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 2026-ம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பைத் தொடர்ந்து, நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.
ஆனால் பா.ஜனதா அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை 2027-ம் ஆண்டுவரை தாமதப்படுத்தியுள்ளது. இது தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் திட்டத்தை தெளிவுபடுத்தியுள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்தநிலையில் மத்திய உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர், நேற்று நிருபர்களிடம் கூறுகையில் தொகுதி மறுவரையறை பணியின்போது தென் மாநிலங்கள் தெரிவித்த கவலைகள் கவனிக்கப்பட்டு, உரிய நேரத்தில் சம்பந்தப்பட்ட அனைவருடனும் விவாதிக்கப்படும் என்று உள்துறை மந்திரி அமித்ஷா பலமுறை தெளிவுபடுத்தியுள்ளார் என்று கூறினார்.