வேலூர்:
வேலூர், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வெங்கடாபுரம் அடுத்த புது வசூர் தீர்த்தகிரி மலையில் பல நூறு ஆண்டு பழமையான வடிவேல் சுப்பிரமணிய சாமி கோவில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு முன்பாக 92 அடி உயரத்தில் மிகப்பிரமாண்டமான முருகன் சிலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த திருவாரூர் ஸ்தபதி இந்த சிலையையும் வடிவமைத்துள்ளார்.
தென் வடக்கு திசையை பார்த்தவாறு மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்த முருகன் சிலை மலை உச்சியில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. தற்போது திருப்பணிகள் முடிந்து கோவிலில் மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது.
கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கோவிலில் இன்று இரவு வான வேடிக்கை மகா அபிஷேகம் அலங்கார தரிசனம் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
இன்று மாலை 6 மணிக்கு இசையமைப்பாளர் கங்கை அமரன் குழுவினரின மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 10 மணிக்கு சாமி வீதி உலா நடைபெறுகிறது.
பிரமாண்ட முருகன் சிலையின் முன்பு குடும்பத்துடன் பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.