பிரதமராக மோடி வந்த பின் தைரியமான முடிவுகள் எடுக்கப்பட்டு டிஜிட்டல் பரிவர்த்தனை கொண்டு வரப்பட்டது – மத்திய இணை அமைச்சர் முருகன்..!

சென்னை;
புதுவை சட்டப்பேரவையை காகிதம் இல்லாத சட்டப்பேரவையாக மாற்றும் வகையில், வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இவிதான் செயலி முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

இவிதான் செயலியை மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் இணை அமைச்சர் எல்.முருகன் புதுவையில் இன்று தொடங்கி வைத்து பேசியது:

“கடந்த காலங்களில் ஏழைகளை உயர்த்த வேண்டும் என கூறி வந்தார்கள். ஆனால் எந்த வேலையும் செய்யவில்லை.

140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 27 கோடி மக்களை கடந்த 11 ஆண்டுகளில் ஏழ்மை நிலையில் இருந்து உயர்த்தியுள்ளோம் என உலக வங்கி கூறியுள்ளது. புதுவைக்கு விமான நிலையம், காரைக்காலில் ஜிப்மர் கிளை கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, துாத்துக்குடி விமான நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. சாதாரண மக்கள்கூட விமானத்தில் செல்லும் சூழ்நிலையை பிரதமர் ஏற்படுத்தியுள்ளார்.

டிஜிட்டல் பரிவர்த்தனை கொண்டு வந்தபோது, அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரம், படிப்பு தெரியாதவர்களுக்கு செல்போனை பயன்படுத்த தெரியாது;இதை எப்படி அவர்கள் பயன்படுத்துவார்கள் என்று கேள்வி கேட்டார். ஆனால் இன்று இந்தியா முழுவதும் பல கிராமங்களில் இதனை பயன்படுத்துகின்றனர்.

முன்பு ஆட்சி செய்தவர்கள் திட்டங்களை தீட்டவோ, நிறைவேற்றவோ தைரியம் இல்லாமல் இருந்தனர். பிரதமராக மோடி வந்த பின் தைரியமான முடிவுகள் எடுக்கப்பட்டு டிஜிட்டல் பரிவர்த்தனை கொண்டு வரப்பட்டது.

டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் நாடுகளில் 2-வது இடத்தை இந்தியா பெற்று சாதனை பெற்றுள்ளது. இந்தியா பொருளாதாரம் உலகளவில் 4-ம் இடத்தை பிடித்துள்ளது. 2027-ல் 3ம் இடம், 2047-ல் அப்துல்கலாம் கனவு கண்ட வல்லரசு நாடாக இந்தியா மாறியிருக்கும்.

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது ஒரு நாடு, ஒரு செயலி என இப்போது இவிதான் செயலி எம்எல்ஏக்கள், எம்பிக்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் வரப்போகிறது” என்று குறிப்பிட்டார். நிகழ்வில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, பேரவைத்தலைவர் செல்வம், செல்வகணபதி எம்.பி, அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய் சரவணன்குமார் மற்றும் எம்எல்ஏக்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *