மேட்டூர் அணை நீர்மட்டம் 114 அடியாக உள்ள நிலையில், டெல்டா பாசனத்துக்காக நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் …..

மேட்​டூர்:
மேட்டூர் அணை நீர்மட்டம் 114 அடியாக உள்ள நிலையில், டெல்டா பாசனத்துக்காக முதல்வர் நாளை திறந்து வைக்கிறார்.

சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரியின் குறுக்கே 120 அடி உயரத்துடன் கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணை, தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கிறது.

அணை முழுக் கொள்ளளவை எட்டும்போது, 93.47 டிஎம்சி நீர் தேங்கி இருக்கும். மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரைப் பயன்படுத்தி தஞ்சாவூர், நாகப்பட்டணம், திருவாரூர், திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 16.40 லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும், 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை, சம்பா, தாளடி பருவங்களில் நெல் சாகுபடி மேற்கொள்வதற்கு உதவியாக, மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரை 230 நாட்களுக்கு மொத்தம் 330 டிஎம்சி நீர் தேவைப்படும்.

அணையில் நீர் இருப்பை பொறுத்து, 12-ம் தேதிக்கு முன்போ, அல்லது காலதாமதமாகவோ அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்… காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்க வேண்டுமானால் அணையில் குறைந்தபட்சம் 90 அடிக்கு நீர் இருந்தால் மட்டுமே சாகுபடிக்கு முழுமையாக நீர் திறக்க முடியும்.

நடப்பாண்டில் அணையின் நீர்மட்டம் 114 அடிக்கும் மேலாக இருந்ததால் நாளை (12-ம் தேதி) டெல்டா பாசனத்துக்கு முதல்வர் ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைக்கிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மேட்டூர் அணையின் 92 ஆண்டு கால வரலாற்றில், உரிய காலத்தில் (ஜூன் 12-ம் தேதி) டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவது இது 20-வது முறையாகும்.

மேலும், நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, ஜூன் 12-ம் தேதிக்கு முன்பு 11 முறை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு தள்ளிப்போனது 61 முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேட்டூர் அணை கடந்த 7 ஆண்டுகளில் முழு கொள்ளளவான நீர்மட்டம் 120 அடியை 5 முறை எட்டியுள்ளது. 2020 மற்றும் 2023 ஆண்டுகளில் மட்டுமே எட்டவில்லை. அணையின் நீர்மட்டம் 100 அடியை 45 முறை எட்டியுள்ளது.

அணையின் நீர்பாசன ஆண்டான 2024 – 2025-ம் ஆண்டில் 281 நாட்கள் நீர்மட்டம் 100 அடியாக நீடித்தது. கடந்த அக்டோபர் மாதம் 23-ம் தேதி முதல் இன்று (11-ம் தேதி) வரை 232 நாட்களாக நீர்மட்டம் 100 அடியாக நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் விநாடிக்கு 5,980 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று காலை 5,482 கனஅடியாக சரிந்தது. காவிரிக் கரையோர மக்களின் குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 114.40 அடியாகவும், நீர் இருப்பு 84.82 டிஎம்சியாகவும் உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *