மின்மாற்றிகள் கொள்முதலுக்கான டெண்டரில் முறைகேடு – செந்தில் பாலாஜி பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு!!

சென்னை:
மின்மாற்றிகள் கொள்முதலுக்கான டெண்டரில் முறைகேடு நடந்ததால் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் கூறியிருந்ததாவது:

தமிழக மின்வாரியத்துக்கு கடந்த 2021-23 காலகட்டத்தில் 45,800 மின்மாற்றிகளை (டிரான்ஸ்பார்மர்) கொள்முதல் செய்ய ரூ.1,183 கோடி மதிப்பில் டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டரில் முறைகேடு நடந்துள்ளது.

இதன்மூலம் அரசுக்கு ரூ.397 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டான்ஜெட்கோ தலைவரும், நிர்வாக இயக்குநருமான ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்க போதிய ஆதாரங்கள் உள்ளதால், உயர் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

நீதிபதி பி.வேல்முருகன் முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக உள்ள லஞ்ச ஒழிப்பு துறைக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ் தரப்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளி்க்கும் வகையில் அவருக்கு நோட்டீஸ் பிறப்பி்த்த நீதிபதி, விசாரணையை ஜூலை 3-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *