ஒலிம்பிக் தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சாஹர் தோல்வி!!

பஸ்டோ அர்சிஜியோ:
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை, ஆகஸ்டு மாதம் நடக்கிறது. இந்த போட்டிக்கான முதலாவது உலக ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதி சுற்று இத்தாலியில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 80 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் தேசிய சாம்பியன் லக்ஷயா சாஹர், 2021-ம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஈரான் வீரர் கெஷ்லாஜி மெய்சாமை சந்தித்தார்.

இதன் முதல் ரவுண்டில் 2-3 என்ற கணக்கில் பின்தங்கிய இந்திய வீரர் லக்ஷயா சாஹர் அடுத்த ரவுண்டில் 3-2 என்ற கனக்கில் பதிலடி கொடுத்து சமநிலையை எட்டினார். 3-வது மற்றும் கடைசி ரவுண்டில் 20 வினாடிகள் மீதமிருக்கையில் மெய்சாம் பலமாக குத்துவிட்டு லக்ஷயா சாஹரை நாக்-அவுட் செய்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஏற்கனவே இந்திய வீரர்கள் தீபக் போரியா (51 கிலோ), நரேந்தர் பெர்வால் (92 கிலோவுக்கு மேல்), வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா (60 கிலோ) ஆகியோர் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு நடையை கட்டி இருந்தனர். ஷிவதபா உள்பட 5 இந்தியர்கள் இன்னும் களத்தில் உள்ளனர். இந்த போட்டியில் அரைஇறுதிக்கு முன்னேறுபவர்கள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *