சென்னை:
அமீர் கான் நடிப்பில் உருவாகியுள்ள சித்தாரே ஜமீன் பர் என்ற திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது.
இப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஸ்பானிஷ் திரைப்படமான சாம்பியன் திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.
இப்படத்தை ஆர்.எஸ் பிரசன்னா இயக்கியுள்ளார். படத்தை அமீர் கான் தயாரித்துள்ளார். இப்படத்தில் அமீர் கானுடன் ஜெனிலியாவும் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சித்தாரே ஜமீன் பர் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. இந்நிலையில், சித்தாரே ஜமீன் பர் படம் தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டதாக அமீர் கான் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் பேசிய அமீர் கான், “லால் சிங் சத்தா’ படத்தின் தோல்விக்குப் பின் உடைந்து போய்விட்டேன்.
அதனால் நடிப்பிலிருந்து பிரேக் எடுத்துக்கொள்ள விரும்பினேன். இது குறித்து இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னாவிடம் தெரிவித்தேன். ஒரு நடிகராக இல்லாமல் தயாரிப்பாளராக திரைத்துறையில் தொடருங்கள் என்று அவர் என்னிடம் சொன்னார்.
நான் அதற்கு ஒப்புக் கொண்டேன். பின்னர் ஃபர்ஹான் அக்தர் மற்றும் சிவகார்த் திகேயன் ஆகிய இருவரிடம் சித்தாரே ஜமீன் பர் படத்தில் நடிக்க பேசினோம். அவர்களுக்கு இப்படத்தின் கதை மிகவும் பிடித்திருந்தது.இந்தி மற்றும் தமிழில் இப்படத்தை எடுக்க திட்டமிட்டு, இருவரின் கால்சீட் தேதிகளை வாங்கினோம்.
இப்படத்தின் கதை விவாதத்தின் போதுதான் நாம் ஏன் இந்தப் படத்தில் நடிக்கக் கூடாது என எனக்கு தோன்றியது. அந்த அளவுக்கு இப்படத்தின் கதை எனக்கு பிடித்திருந்தது. நான் இப்படத்தில் நடிக்க இயக்குனர் ஆர்.எஸ்.பிரசன்னா ஒப்புக் கொண்டார்.
பின்னர் பர்ஹான் அக்தர் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரிடமும் பேசி இதுகுறித்து மன்னிப்பு கோரினேன். அவர்களுக்கு இது முதலில் ஏமாற்றமாக இருந்தாலும் பின்னர் எனது சூழ்நிலைமையை புரிந்துக் கொண்டார்கள்” என்று அமீர் கான் தெரிவித்தார்.