லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று தொடங்குகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், 7 முறை கோப்பை வென்ற செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் களமிறங்க உள்ளனர்.
இந்நிலையில், விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் தொடர்ச்சியாக 2 முறை (2023, 2024) கோப்பை வென்ற அல்காரஸ், சமீபத்தில் பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இம்முறை அசத்தினால் விம்பிள்டனில் ஹாட்ரிக் பட்டத்தைக் கைப்பற்றலாம்.
அதேபோல், இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் கோப்பை வென்ற சின்னர், பிரெஞ்சு ஓபனில் இறுதிப்போட்டி வரை சென்றிருந்தார்.
சூப்பர் பார்மில் உள்ள இவர், இம்முறை சிறப்பாக செயல்படும் பட்சத்தில் விம்பிள்டனில் தனது முதல் பட்டத்தை வெல்லலாம் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.