அமித்ஷாவின் முயற்சிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக கூட்டணி கட்சிகள் சொல்வது சரியாக இருக்காது – டிடிவி தினகரன்!!

சென்னை:
அமித்ஷாவின் முயற்சிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக கூட்டணி கட்சிகள் சொல்வது சரியாக இருக்காது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அமமுக மணப்பாறை சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தி.மு.க வை வீழ்த்த வேண்டும் என்பதில் தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக உள்ளது.

மற்ற கூட்டணி கட்சிகளும் உள்ளன. எங்களைப் பொறுத்தவரை அமித்ஷா சொல்வது தான் எங்கள் நிலைப்பாடு. தி.மு.க வை வீழ்த்த வேண்டும் என்ற முயற்சியில் தேசிய ஜனநாயக கூட்டணியை ஒன்றிணைத்து அமித்ஷா செயல்பட்டு வருகிறார்.

அவரின் முயற்சிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் சொல்வது சரியாக இருக்காது. இந்த ஆட்சியைப் பொறுத்தவரை 2026ல் மக்கள் நிச்சயம் அகற்றுவார்கள்.

இந்த ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து கோபத்தில் உள்ளனர். அனைத்திலும் ஊழல் நிறைந்த ஆட்சியாக உள்ளது. சட்டம் ஒழுங்கில் தொடங்கி அனைத்திலும் மோசமான நிலையில் உள்ளது.

தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. போராடிய ஆசிரியர்கள் கைது செய்யப்படும் நிலை உள்ளது. 2046ம் ஆண்டு வந்தாலும் கூட இந்த ஆட்சி மீண்டும் வராது.

சுதந்திரத்திற்கு பின் இப்படி மக்களை ஏமாற்றிய ஆட்சியை பார்த்திருக்க முடியாது. கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய சம்பவம் துயரமானது. இதுபோன்ற சம்பவம் இனி எப்போதும் நடைபெறாத அளவு ரெயில்வே துறை நடவடிக்கை எடுத்திட வேண்டும்” என்று கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *