“தமிழில் அர்ச்சனை எனும் புரட்சியை முன்னெடுத்தவர் குன்றக்குடி அடிகளார்” – முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!!

சென்னை:
“தமிழில் அர்ச்சனை எனும் புரட்சியை முன்னெடுத்தவர். பகட்டுச் சம்பிரதாயங்களைத் தவிர்த்தவர். மனிதநேயம் போற்றிய சமத்துவச் சிந்தனையாளர்.” என்று தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு நாளான இன்று முதல்வர் ஸ்டாலின் அவரைப் புகழ்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், ”தமிழில் அர்ச்சனை எனும் புரட்சியை முன்னெடுத்தவர். சமூகநீதித் தளத்தில், தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் எனத் திராவிட இயக்கத்துக்குத் துணையாக நின்ற மாண்பாளர்.

சோவியத் யூனியன் பயணத்தின் உந்துதலால், பிரதமர் இந்திரா காந்தியே பாராட்டிய ‘குன்றக்குடிக் கிராமத் திட்டம்’ கொண்டுவந்த பொதுவுடைமைச் சிந்தனையாளர்.

பகட்டுச் சம்பிரதாயங்களைத் தவிர்த்து மனிதநேயம் போற்றிய சமத்துவச் சிந்தனையாளர். இந்தி எதிர்ப்புப் போரில் பங்கெடுத்த தமிழுணர்வாளர்.

கலைஞரின் விருப்பத்தின் வழியே தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகி, மேலவையில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகப் பேசிய பெருந்தகையாளர்.

தமிழ்ச்சமூகத்தின் சமூகவியல் உள்ளடக்கிய இறையியல் அடையாளமாக விளங்கும் திருக்கைலாய பரம்பரைத் திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி 45-ஆவது மகாசந்நிதானம் திருப்பெருந்திரு தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் எனும் குன்றக்குடி அடிகளாரின் புகழ் வாழ்க. அவரது வழியில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் தொண்டு தொடரட்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *