ரூ. 992 கோடி ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக போராடினால் கைது – சீமான் குற்றச்சாட்டு!!

சென்னை;
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக போராடிய அறப்போர் இயக்கத்தினைச் சேர்ந்த தம்பி ஜெயராமன் உட்பட 14 பேரை தமிழ்நாடு அரசு (10.07.2025) கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “992 கோடி ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் கிறிஸ்டி நிறுவன குமரசாமியை கைது செய்யக் கோரி போராடிய நிலையில் அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல், அது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வதை விட்டுவிட்டு போராடியவர்களையே தமிழ்நாடு அரசு கைது செய்துள்ளது.

திமுக அரசானது ஆட்சிக்கு வந்த பின்னர் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் போதெல்லாம், அவை அதிமுக ஆட்சி காலத்தில் நடந்திருந்தாலும் அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக எதிர்க்குரல்களை அடக்கி, உண்மையை மறைக்கவே முனைகிறது.

அறப்போர் இயக்கம், தமிழ்நாட்டின் பொது விநியோகத் துறையில் நடந்த பெரும் ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது.

இந்த ஊழல், பொதுமக்களின் வரிப்பணத்தை சுரண்டி, அடிப்படை சேவைகளுக்கான நிதி ஒதுக்கீட்டைப் பாதித்திருக்கிறது.

ஆனால், இந்த அரசு, ஊழலை விசாரிக்க வேண்டிய பொறுப்பைத் தவிர்த்து, உண்மையை வெளிப்படுத்தும் குரல்களை அடக்க முயல்கிறது.

தம்பி ஜெயராமனின் கைது, தமிழ்நாடு அரசின் அரசியல் பழிவாங்கல் மற்றும் ஊழலை மறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.

இந்த அரசு, ஊழலை எதிர்க்கும் குரல்களை அடக்குவதன் மூலம், தங்களின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

போராடும் பொது மக்களையும் தன்னார்வலர்களையும் கைது செய்யும் எதேச்சதிகாரப் போக்கினைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

மேலும், அறப்போர் இயக்கம் வெளிக்கொண்டு வந்த ஊழல் குற்றச்சாட்டுகளின் மீது உடனடி நடவடிக்கையும் எடுத்திட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *